இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி

நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கருத்து.....

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :

மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில்.. “தமிழ்நாடு, ஹிந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது” என்று மாண்பமை உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனிநாடாக இயங்கவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது.

ஹிந்தியைத் திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். `வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தாங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.

`இந்திய சீனப் போர்’, `வங்கதேச விடுதலைப் போர்’, `கார்கில் போர்’, `குஜராத் நிலநடுக்கம்’ என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை, வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, `ஹிந்தி மொழித் திணிப்பு வேண்டாம்’ என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஹிந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே, தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாகத் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, ஹிந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

எனவே, ஹிந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது; இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.

அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.

அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காகத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதியைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பைக் கொண்டே சிறப்பாகச் செயல்பட முடியும்.

மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, `சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.

தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். மேலும், தேவை எழுந்தால் உடனடியாகச் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனித் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணாவால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையை, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம்! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்துவோம்! என்று தெரிவித்துள்ளார்.

Summary

Leader of the Opposition Udhayanidhi Stalin stated that they will block Navodaya schools that impose the three-language policy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.