
நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது பற்றி...

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்திரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிா்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பின்னா் 15.12.2025 அன்று அந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயாவை நிறுவுவதற்குத் தேவையான நிலத்தின் அளவை(களை) அடையாளம் காணுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஜவஹா் நவோதயா பள்ளிகள் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது.
உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்துவரும் நல்ல விஷயங்களுடன் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துக்கொள்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது. தில்லியிலிருந்து வரும் ஒரு விஷயம் சென்னையின் தரத்தைக் குறைத்துவிடாது. சென்னை மக்கள் தில்லியை அந்நியப்படுத்தக்கூடாது. அதேபோல், தில்லியும் சென்னையை அந்நியப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இது மாநிலத்தின் கொள்கைக்கு எதிரானது. இது தமிழுக்கு மேலாக ஹிந்தியை முன்னிறுத்துகிறது. இத்தகைய ஒருங்கிணைப்பு அரசியலமைப்பின் நோக்கமல்ல. இது மத்திய அரசு நடத்தும் பள்ளி அல்ல. ஒரு சங்கத்தால் நடத்தப்படும் பள்ளி. இதில் ஹிந்திதான் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டப்படுகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன, அதனடிப்படையிலேயே செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “ஹிந்திதான் பிரச்னை என்றால் மத்திய - மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். எங்கள் முந்தைய உத்தரவை அமல்படுத்துங்கள். நிலத்தை கையகப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. இடத்தைக் கண்டறியுமாறு மட்டுமே கேட்கிறோம்.
நான் ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நீங்கள் கூற முடியாது. இன்று கல்வித் துறை என்றால், நாளை வேறொன்றாக இருக்கலாம். உங்கள் மனதிலிருக்கும் இந்த இறுக்கமான நிலையை நீங்கள் தளர்த்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மூன்று மாதத்துக்குள் செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Summary
Supreme Court orders Tamil Nadu government to select sites for Navodaya schools
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








