திரையில் சிறப்புக் காட்சிகளில் தோன்றி பாடல்களுக்கு உயிரூட்டிய தேவா!
கானா பாடல்களின் கிங் தேவா திரையில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றிய படங்கள் பற்றி..
தேனிசைத் தென்றல் தேவா - dps
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். தேவாவின் இறப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கண்கலங்க வைத்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவாவுக்கு வயது 75. நெஞ்சு வலி காரணமாக கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா மாரடைப்பால் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இசையுலகில் மிகவும் பிரபலமான தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை முதல் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்திய முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் தனி இடத்தைப் பெற்றவர். இவரை ரசிகர்கள் "தேனிசைத் தென்றல்" என்று அன்புடன் அழைத்தனர்.
சொக்கலிங்கம் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு 1950 நவம்பர் 20ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவருக்கு சபேஷ், முரளி, சம்பத் என மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவருக்கு ஸ்ரீ காந்த் தேவா என்ற மகன் உள்ளார்.
தேவா சிறுவயதிலிருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கர்நாடக இசைப் பயிற்சி பெற்றதுடன், மேற்கத்திய இசையை கற்றவர். இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பின்னர், திரைப்பட இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
1980-ல் திரைப்பட இசைத்துறையில் அறிமுகமான தேவா 1989-ல் "மனசுக்கேத்த மகராசா" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கானா பாடல்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுப்புற இசை, காதல் பாடல்கள், அதிரடியான பின்னணி பாடல்களுக்கு இசையமைத்தவர். இவர் 1995ல் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பின்னணி இசையும் தேவாவின் புகழை மேலும் உயர்த்தின. அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இது தேவாவின் அடையாளங்களில் ஒன்றாக அமைந்தது. அஜீத் நடித்த ஆசை படத்திற்குத் தனது இனிமையான பாடல்களின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவருடைய பிரபலமான இசைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான படம் அருணாச்சலம். குஷி திரைப்படத்திற்கு இசையமைத்தவர். இந்த படம் ரசிகர்களின் மனதில் இன்றும் பசுமையாக நினைவுகூரப்படுகின்றன.
இசையமைப்பாளர் தேவா திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சிறப்புத் தோற்றங்களில் பாடல்களில் திரையில் தோன்றி நடித்துள்ளார்.
தேவா சிறப்புத் தோற்றத்தில் நடித்த திரைப்படங்களின் பட்டியல்...
அண்ணாமலை (1992) - ரஜினிகாந்த் நடத்த இப்பத்தின் புகழ்பெற்ற வந்தேண்டா பால்காரன் பாடலின் தொடக்கத்தில் தேவா திரையில் தோன்றி மாட்டு வண்டியை ஓட்டி வருவார்.
பாட்ஷா (1995): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலான "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" பாடலின் ஆரம்பத்தில் சில நொடிகள் தோன்றுவார்.
பகவதி (2002): "போடாங்கோ" பாடலின் தொடக்கத்தில் தேவா திரையில் வந்து பாடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
சிவசக்தி (1996) - இந்தத் திரைப்படத்தில் "மை நேம் இஸ் சக்தி" என்ற பாடலின் தொடக்கக் காட்சியில் நடிகர் பிரபுவுடன் இணைந்து சிறிய காட்சியில் இசையமைப்பாளர் தேவா திரையில் தோன்றி நடித்திருப்பார்.
சும்மா இருங்க மச்சான் (1996) - பாண்டியராஜன் பிரகதி நடிப்பில் வெளியான இப்படத்தில் சந்திரனும் ஒன்னுதான் சூரியனும் ஒன்னுதான் என்ற பாடலைத் தேவா பாடி இசையமைத்திருந்தார். இப்பாடலின் விடியோவில் இசையமைப்பாளர் தேவா சிறப்புத் தோற்றத்தில் தோன்றிப் பாடுவார்.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (1998) - இந்தத் திரைப்படத்தை இசையமைத்திருந்த தேவா அவர் ஸ்டுடியோவில் தோன்றுவது போலச் சிறிய காட்சிகள் வரும்.
வாணி மகால் (2003) - இந்த திரைப்படத்தை இசை அமைப்பாளர் தேவா சிறப்புத் தோற்றத்தில் சிறிய காட்சிகளில் நடித்திருப்பார்.
அடி தடி (2004) -திரைப்படத்தில் இடம்பெற்ற "தகடு தகடு" பாடலில், இசையமைப்பாளர் தேவா சிறிய காட்சிகளில் தோன்றி சிறப்புத் தோற்றம் தந்துள்ளார்.
இங்கிலீஷ்காரன் (2005) - சக்தி சிதம்பரம் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலில் இசையமைப்பாளர் தேவா சத்யராஜுடன் சேர்ந்து சில காட்சிகளில் தோன்றி நடனமாடியிருப்பார்.
மோதிவிளையாடு (2009) - இப்படத்தின் டைட்டில் பாடல் காட்சியில், பிரபல இசையமைப்பாளர் தேவா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்
சூரியன் சட்டக் கல்லூரி (2009) - இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "காதல் பண்ணப் போறியா" பாடலின்போது, அந்தப் பாடலைப் பாடி இசையமைத்த தேவா திரையில் தோன்றி பாடியபடியே சிறிய காட்சிகளில் நடனமாடி நடித்திருப்பார்.
இசையமைப்பாளர் தேவா மறைந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் தலைமுறை தலைமுறையாகப் பசுமையான நினைவுகளைத் தந்துகொண்டே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

