நெல் வரத்து குறைவால் 20% கொள்முதல் குறையலாம்! அமைச்சர் வெங்கடரமணன்
நெல் கொள்முதல், அரிசி விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசியது...

புதுக்கோட்டை துளையானூரில் சேமிப்புக் கிடங்கைத் திறந்து வைத்த உணவுத் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன். உடன் அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோர். - DIN
புதுக்கோட்டை: மழை இல்லாதது, காவிரியில் தண்ணீர் வராதது போன்ற காரணங்களால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், 20 சதவிகிதம் நெல் கொள்முதல் குறையலாம் என மாநில உணவுத் துறை அமைச்சர் ப. வெங்கட ரமணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை கட்டியாவயல் அருகிலுள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கடந்த ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட கிடங்குகளின் கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது திறந்து வருகிறோம்.

புதுக்கோட்டை கட்டியாவயலில் உள்ள சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த உணவுத் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் உள்ளிட்டோர். - DIN
இவற்றின் மூலம் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் கிடந்து வீணாவது தடுக்கப்படும், கிடங்குகளில் பாதுகாப்பாக நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் திறக்கப்படும் கிடங்குகளால் 2,500 டன் நெல் பாதுகாக்கப்படும்.
மழை பெய்யாதது மற்றும் காவிரியில் தண்ணீர் வராதது போன்ற காரணங்களால் நடப்பு சாகுபடி குறைவாகவே நடைபெற்றிருக்கிறது. இதனால் நெல் வரத்தும் குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே சீசனில் 7.60 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. நிகழாண்டில் தற்போது வரை 3.5 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்திருக்கிறோம். இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. அநேகமாக இன்னும் 3 லட்சம் டன் கொள்முதல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 சதவிகிதம் கொள்முதல் பாதிக்கப்படலாம்.
மற்றபடி, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் போதுமான அளவுக்கு இருப்பு இருக்கிறது. அவற்றை அரைவைக்கும் அனுப்பியிருக்கிறோம். எனவே, பற்றாக்குறை எதுவும் வர வாய்ப்பில்லை.
அரிசி விலை உயர்வைப் பொருத்தவரை கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பரில் அவை கிடைக்கத் தொடங்கிவிடும். ரேஷன் கடைகளில் சன்னரக அரிசி ரூ. 30-க்கு வழங்கத் தொடங்கியிருக்கிறோம். இவற்றால், வெளிச்சந்தையில் அரிசி விலை குறையும்.
பொதுவாகவே ரேஷன் கடைகளில் மோட்டா ரக அரிசி விநியோகத்தைக் குறைத்துவிட்டு, சன்னரக அரிசி விநியோகத்தை அதிகரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அரிசிக் கடத்தலைத் தடுக்கவும் தொடர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பருப்பு உள்ளிட்ட மற்ற பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ. 256 மதிப்புள்ள பொருள்களை ரேஷன் கடைகளில் ரூ. 200-க்கு வழங்கி வருகிறோம்.
பொதுவாக எதிர்க்கட்சியினர் குற்றசாட்டுகளைச் சொல்வார்கள். அவர்கள் கூறுவனவற்றில் சாத்தியமான ஆலோசனைகளை எடுத்துக் கொள்வோம்" என்றார்.
தொடர்ந்து, திருமயம் வட்டம் துளையானூரில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ. 2.65 கோடியில் கட்டப்பட்ட கிடங்கையும், கொன்னையூர் கிராமத்தில் ரூ. 1.70 கோடியில் கட்டப்பட்ட கிடங்கையும் அவர் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை வகித்தார். தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Summary
Paddy procurement may decrease by 20 percent due to reduced supply: Venkataramanan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

