திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை! வன்னி அரசு காட்டம்!எல். முருகன் ராஜிநாமா: நவ. 12ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்!தங்கம் விலை இன்று அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (அக். 22)வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

ஒருநாள் பெய்த மழைக்கே வெள்ளம்: பள்ளிக்கரணை தடுப்புச் சுவரை உடைக்க வேண்டும்!அன்புமணி

மழைநீர் வெள்ளம்போல தேங்கியுள்ளதால் பள்ளிக்கரணை தடுப்புச் சுவரை உடைக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்...

anbumani

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :

பள்ளிக்கரணை பகுதியில் ஒருநாள் பெய்த மழைக்கே வெள்ளம்போல நீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கரணை தடுப்புச் சுவரை உடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல்  மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ. நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டு வருவதால், அதைச் சுற்றியுள்ள பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை பகுதிகளில் கடந்த 17 ஆம் தேதி பெய்த மழை நீர் சதுப்பு நிலத்திற்குள் செல்ல முடியாமல் வெள்ளம்போல தேங்கி நிற்கிறது. நடைபாதை மற்றும் தடுப்புச் சுவரால் பள்ளிக்கரணை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று பாமக எச்சரித்தும், அத்திட்டத்தை கைவிடாமல் இத்தகைய சீரழிவை வனத்துறை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ. நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ. நீளத்திற்கு  நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன. தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும் என்றும், அத்தகைய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க இந்தத் திட்டத்தைக் கைவிட்டு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை தகர்க்க வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணியும், கடந்த 12-ஆம் தேதி நானும் நேரில் சென்று ஆய்வு செய்த போதும் இதே எச்சரிக்கையை விடுத்திருந்தோம். ஆனால், நான் ஆய்வு செய்த போது, இந்தத் திட்டம் குறித்து எனக்கு விளக்கம் அளித்த வனத்துறை அதிகாரி  தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதைக்கு கீழ் இராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால்  மழை நீர் எளிதாக வடியும் என்று தெரிவித்தார். ஆனால், வனத்துறை அளித்த விளக்கம் தவறானது என்பது இப்போது உறுதியாகி விட்டது.

கடந்த 17 ஆம் தேதி  சென்னையில் சில இடங்களில் 30 செ.மீ.க்கும் கூடுதலாக மழை பெய்த போதிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விட்டது. ஆனால், பள்ளிக்கரணை, ஜல்லடியான் பேட்டை ஆகிய இடங்களில் பெய்த மழையால் தேங்கி நிற்கும் நீரை  எந்திரங்கள் மூலம் சதுப்பு நிலத்தில் வடியச் செய்ய வனத்துறையினர் போராடி வரும் போதிலும் இப்போது வரை மழை நீர் முழுமையாக வடியவில்லை. சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட நீரால் எவ்வளவு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கு இதுவே சான்று.

ஒரு நாள் பெய்த மழைக்கே பள்ளிக்கரணை, ஜல்லடியான் பேட்டை பகுதிகளில் இந்த அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது என்றால், வடகிழக்கு பருவமழையின் போது தொடர்ச்சியாக சில நாள்கள் மழை பெய்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.  தொடர்ந்து மழை பெய்தால் வேளச்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருப்பதை  அரசு உணர வேண்டும்.

ஒருபுறம், மழைநீரை சேகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் கலந்து கொள்கிறார். புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற விதி இனி கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், இன்னொரு புறம் சென்னையின் மிகப்பெரிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவரைக் கட்டி வனத்துறை சீரழிக்கிறது. இது என்ன முரண்பாடு?

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.  பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்ட போதிலும்,  இந்தத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திய அதிகாரிகள் இன்னும் அதே பணியிடங்களில் தொடர்கிறார்கள். திமுக ஆட்சியில் தீட்டப்பட்ட பல திட்டங்கள் தவெக அரசால் ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இந்தத் திட்டம் மட்டும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியவில்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். அதை ஆக்கிரமிக்க அனுமதிப்பது மட்டுமின்றி, அதன் இயல்பை கெடுக்கும் வகையிலான திட்டங்களைச் செயல்படுத்துவதும் குற்றம்தான்.  எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை பணிகளை நிறுத்தி, ஏற்கனவே செய்யப்பட்டுள்ள கட்டுமானங்களை இடித்து அகற்ற வேண்டும். இந்தத் திட்டம் என்ன நோக்கத்திற்காக உருவாக்கி செயல்படுத்தப்பட்டது, அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்?  என்பது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rain Floods: Pallikaranai retaining wall must be broken down: Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.