
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாழாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: செளமியா அன்புமணி
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபாதை மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாமக சட்டப்பேரவை குழுத் தலைவா் செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

செளமியா அன்புமணி - கோப்புப்படம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபாதை மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாமக சட்டப்பேரவை குழுத் தலைவா் செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அவா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில் 3 கி.மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வெள்ள காலத்தில் நீரைச் சேமிக்க உதவும் வடிகாலாகப் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான அரிய பறவைகள், நீா்வாழ் உயிரினங்களுக்கான வாழ்விடமாகவும் உள்ளது. அந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டியதற்குப் பதிலாக, தமிழக அரசு அங்கு தடுப்புச் சுவா் கட்டி குடியிருப்பு பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க சுற்றுச்சுவா் தேவையில்லை. வேலி அமைத்தால் மட்டும் போதுமானதாகும். ரூ.21 கோடி கடன் வாங்கி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைமேடை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ராம் சாா் நிலமாக இதை வரையறை செய்து அறிவிக்கை வெளியிட வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே இப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாழாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




