நாம் அணி மாறியது நம்மால் ஏற்பட்டது அல்ல: தொல். திருமாவளவன்
நமக்குரிய மதிப்பை உரிய நேரத்தில் தர இயலாதவர்களால் அணி மாறுதல் ஏற்பட்டது என திருமாவளவன் பேசியிருப்பது குறித்து...

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - டிஎன்எஸ்
தஞ்சை: நாம் அணி மாறியது நம்மால் ஏற்பட்டது அல்ல, நம்மை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களால் ஏற்பட்டது. நமக்குரிய மதிப்பை உரிய நேரத்தில் தர இயலாதவர்களால் அது ஏற்பட்டது, இன்னும் சொல்ல போனால் அந்த கூட்டணியை பாதுகாத்து வந்தது திருமாவளவன் என்று சொல்வது மிகை இல்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உஞ்சை விடுதி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
கட்டமைப்பை வலுப்படுத்துவோம்
அப்போது, தோழர்களே நமது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். காலம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது, விடுதலைச் சிறுத்தைகள் தான் நமது தேவை என்று இளைஞர்கள் தேடி வரத் தொடங்கியுள்ளனர்.
கைக்கூலிக்காக பேசக்கூடிய கும்பல்
அல்லு சில்லுகள் - அற்பர்கள் சமூக ஊடகங்களில் விமர்சனம் பண்ணுவதை ஒருபோதும் பெரிது படுத்த வேண்டாம். அவர்கள் கைக்கூலிக்காக பேசக்கூடிய கும்பல்கள். நாம் நமது நிலைப்பாட்டில் உறுதியாகவும், தெளிவாகவும், சரியாகவும் இருக்கின்றோம். நாம் நம்முடைய இலக்கை நோக்கி பயணிக்கின்றோம். அதில் இன்னும் கூடுதலான செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. நமது கவனத்தை சிதறிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள் அதற்கும் நாம் பலியாகி விடக்கூடாது. நமது எதிராளிகள் அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர்கள் விரும்பும் கருத்துக்களை நாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இல்லை, அந்த உண்மை உணரும் பொழுது நம்மை பாய்ந்து பிராண்டுகிறார்கள்.
அதிகாரத்தை தேடி ஓடியதில்லை
மக்களோடு நாம் இருக்கின்றோம், மக்கள் பிரச்னைகளை நாம் பார்க்கின்றோம், நம்மை பார்த்து இவர்கள் எல்லாம் அரசியல் ஆட்சி அதிகாரத்தில் இணைந்து விட்டார்கள் என்று பொருமுகிறார்கள். வயிற்று எரிச்சல் தாங்க முடியாமல் கதறுகிறார்கள், நாம் அதிகாரத்தை தேடி ஒருபோதும் ஓடியதில்லை,
அணி மாறியது நம்மால் ஏற்பட்டதில்லை
25 ஆண்டுகள் அரசியல் வாழ்வில் ஒரு ஆறே ஆறு மாதங்கள் மட்டுமே அதிமுகவோடு பயணித்துள்ளோம், ஒரு சில மாதங்கள் மட்டுமே மக்கள் நல கூட்டணியில் பயணித்திருப்போம், இரண்டு மூன்று ஆண்டுகள் தனித்து செயல்பட்டோம், மொத்தத்தில் ஒரு நான்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் தான் வெளியில் இருந்தோம், மீதம் 20 ஆண்டுகள் திமுகவுடன் கூட்டணியில் பயணித்திருக்கின்றோம், நம்மைப் போன்று இத்தனை ஆண்டுகள் கொள்கை உறுதியோடு ஒரு கூட்டணியில் தொடர்ந்து பயணித்தவர் யாரும் இல்லை, நேரத்திற்கு நேரம் அணி மாறக் கூடியவர்கள் தான் இன்று நம்மை பார்த்து விமர்சனம் செய்கிறார்கள், இன்றும் நாம் அணி மாறியது நம்மால் ஏற்பட்டது அல்ல, நம்மை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களால் ஏற்பட்டது.
கூட்டணியை பாதுகாத்தது திருமாவளவன்
நம்முடைய அருமையை புரிந்து கொள்ள முடியாதவர்களால் ஏற்பட்டது, நம்மை முறைப்படி மதிக்க தெரியாதவர்களால் அது நடைபெற்றது, நமக்குரிய மதிப்பை உரிய நேரத்தில் தர இயலாதவர்களால் அது ஏற்பட்டது, இன்னும் சொல்ல போனால் அந்த கூட்டணியை பாதுகாத்து வந்தவர் திருமாவளவன் என்று சொல்வது மிகை இல்லை, இன்று அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தவிர்த்துவிட்டு எந்த ஒரு அரசும் அமையாது.
சுய விமர்சனம் செய்து பார்க்க வேண்டும்
கலைஞரை முட்டாள் என்றும் திருட்டுப் பயல் என்றும் விமர்சனம் செய்த ஒரு கட்சிக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் ஆண்ட கட்சி இருக்கிறது. மற்றவர்களை விமர்சனம் செய்யும் முன்பாக அவர்கள் தான் தங்களை சுய விமர்சனம் செய்து பார்க்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது யாராலும் அளவு எளிதில் களங்கம் பூசி விட முடியாது என பேசினார்.
Team change was caused by those who could not sustain us: Thol. Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


