தீபாவளிக்குள்... அரிசி விலை குறித்து நல்ல செய்தி சொன்ன அமைச்சர்கள்!
தீபாவளிக்குள் அரிசி விலை குறைக்கப்படும் என நல்ல செய்தி சொன்ன அமைச்சர்கள்

அமைச்சர்கள் - dps
வெளிமாநில நெல் மூட்டைகளைத் திருப்பி அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தீபாவளிக்குள் அரிசி விலை கட்டுக்குள் வரும் என அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் உறுதி அளித்துள்ளனர்
சென்னையை அடுத்த செங்குன்றம் நெல் மண்டியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் கூட்டாக ஆய்வு நடத்தினர்.
அப்போது, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல் மூட்டைகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தீபாவளிக்குள் அரிசி விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர் செங்குன்றம் நெல் மண்டியில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
புழல் ஏரிக்கு அருகே வெளிமாநிலங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள், லாரி ஓட்டுநர்களிடம் நெல்வரத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கூறியதாவது: தமிழகத்தில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீபாவளிக்குள் அரிசி விலை குறைந்து கட்டுக்குள் வரும். தற்போது நாள்தோறும் 150 முதல் 200 லாரிகள் வரை நெல்வரத்து உள்ளது. தெலங்கானாவில் இருந்து நெல் வரத்து அதிகரித்து வருகிறது. அங்கிருந்து நாள்தோறும் 4,000 டன்னுக்கும் அதிகமான நெல் வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மிகச் சன்ன ரக நெல் அதிகளவில் தமிழகத்திற்கு வருகிறது. எனவே, அரிசி விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிவரும் லாரிகள் சிரமமின்றி வந்து செல்லவும், அவற்றை நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
அரிசி விலை குறைக்கப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம். பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சன்ன ரக அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செங்குன்றம் நெல் மண்டிக்கு வரும் நெல் மூட்டைகளைப் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிக்குள் அரிசி விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் நெல் மூட்டைகளை உள்ளூர் விவசாயிகளின் நெல் மூட்டைகள் எனக் கூறி விற்பனை செய்வதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அத்தகைய குற்றச்சாட்டை மறுத்த அவர், கொள்முதல் செய்யப்பட்ட பிறகு கலப்படம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
வியாபாரிகள் லாபம் ஈட்டுவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் கூறுவது தவறான கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல் மூட்டைகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதோ அல்லது திருப்பி அனுப்புவதோ கூடாது. அவ்வாறு செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நல்ல காரியம் செய்யப்படுகிறது. அதை அரசியல் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். தொலைக்காட்சிகளில் அரசியல் குறித்த செய்திகளே தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. நல்ல செய்திகளைப் பரப்புங்கள்” என்று தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அரிசி விலை குறையும் என்ற அமைச்சர்களின் உறுதி, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

