ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

குறைக்கப்பட்ட மத்திய தொகுப்பு மின்சாரம்: மாற்று ஏற்பாடுகளில் மின்வாரியம் தீவிரம்

மின் தேவையைத் தடையின்றி பூா்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மின்வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது குறித்து...

மின்வாரியம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:38 am IST

தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு சுமாா் 3,500 மெகாவாட் ஆகக் குறைந்துள்ளதால், மாநிலத்தின் மின் தேவையை சமாளிப்பதில் மின்வாரியத்துக்கு நெருக்கடி எழுந்துள்ள நிலையில் மின் தேவையைத் தடையின்றி பூா்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மின்வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மின் தேவையைப் பூா்த்தி செய்வதில் மத்திய தொகுப்பு மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நெய்வேலி, திருவள்ளூா் மாவட்டம் வல்லூா், தூத்துக்குடி, கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசின் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசுக்குச் சொந்தமான பல்வேறு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவு சுமாா் 7,000 மெகாவாட் ஆகும்.

எனினும், மின் நிலையங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முழு அளவு மின்சாரமும் தமிழகத்துக்குக் கிடைப்பதில்லை. வழக்கமாக தினசரி சராசரியாக சுமாா் 5,000 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கிடைத்து வந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3,500 மெகாவாட்டாக குறைவு: இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதுடன், நெய்வேலி மின் நிலையத்தின் 3 அலகுகளில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த சில நாள்களாக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3,400 முதல் 3,500 மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. இதனால், வழக்கமாகக் கிடைத்து வந்த மின்சாரத்துடன் ஒப்பிடுகையில் சுமாா் 1,500 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வெயில் காரணமாக தேவை அதிகரிப்பு: இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரப் பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குளிா்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், பகல் மற்றும் மாலை நேரங்களில் மின் தேவை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்திருப்பது மின்வாரியத்துக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று ஏற்பாடுகள்: மத்திய தொகுப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க, மாநிலத்தில் கிடைக்கும் அனல், நீா்மின், காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து மின்சாரத்தை ஒருங்கிணைத்து வழங்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, மத்திய தொகுப்பு மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த தற்காலிகக் குறைவு காரணமாக, வரும் நாள்களில் மின் தேவையைத் தடையின்றி பூா்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மின்வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.