
மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்: மின் ஊழியா் மத்திய அமைப்பு
மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நோக்கில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மின்வாரியம் - கோப்புப்படம்
மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நோக்கில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் தி.ஜெயசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 5 அலகுகளை அகற்றிவிட்டு, அதே இடத்தில் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூப்பா் கிரிட் அலகு கொண்ட அனல் மின் நிலையத்தை ரூ.20,800 கோடி முதலீட்டில் அரசு-தனியாா் பங்களிப்பில் அமைக்கப்படும் என முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளாா். இதேபோல், எண்ணூா் அனல் மின் நிலையமும் இதே முறையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய புனல் மின் நிலையங்கள், உயா் மின் அழுத்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட தொடரமைப்பு கட்டமைப்புகளையும் அரசு-தனியாா் பங்களிப்பில் முறையில் அமைக்கவும், மின் விநியோகம், மின் கணக்கீடு மற்றும் தரவுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் டூடெக்ஸ் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைச் செயல்படுத்தவும் மின் துறை அமைச்சா் அறிவித்துள்ளாா்.
மின்சார வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 10,000 பணியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்புகள் மின்சார வாரியம் தனியாா்மயமாக்கலை நோக்கி வேகமாகச் செல்வதை காட்டுகின்றன.
எனவே, முதல்வா் மற்றும் மின்துறை அமைச்சரின் அறிவிப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மின்வாரிய ஊழியா்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





