
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்!குற்றப்பத்திரிகை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்...

புதுச்சேரி நீதிமன்றம் - video grab
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தன்னுடைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுகொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று கூற இங்கிலாந்து அதிபர் இல்லை என்று நீதிமன்றம் காட்டமாக தெரிவித்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று நேரில் ஆஜரானார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தனது உடன்பிறந்த தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் வசித்து வந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். மரிய வில்சன் கொலை மிரட்டல் விடுத்த காணொலி தேர்தல் நேரத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்கு சேதம், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனிடையே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக்கொள்வதற்காக ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் சமரச மன்றம் மூலம் இரண்டு தரப்பினரும் தீர்வு காண வேண்டும் என தெரிவித்த நிலையில், சமரச முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என்றும் நான்காம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் கட்டாயம் கொடுக்கப்படும் என நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மரிய வில்சன் ஆஜராகி குற்றப்பத்திரிகை மற்றும் அது அடங்கிய பென்ட் ரைவ் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.
Summary
Appeared in Puducherry Court! Maria Wilson received the charge sheet!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




