
தமிழகத்தின் யானை வழித்தடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் யானை வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
தமிழகத்தில் யானை வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு, அறிவிப்பு வெளியிடக் கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், யானை வழித்தடங்களைக் கண்டறிய முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் ஜவாலகிரி-தக்கட்டி, ஜவாலகிரி-அஞ்செட்டி, பில்லிக்கல்-ஜவாலகிரி ஆகிய மூன்று பகுதிகளை யானைகள் வழித்தடங்களாக அறிவித்து ஆக.27-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, யானை வழித்தடங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுத் தலைவரான முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் வேணு பிரசாத், தமிழக அரசு அமைத்துள்ள குழு 41 பகுதிகளை யானை வழித்தடங்களாக அடையாளம் கண்டுள்ளது. இந்த 41 பகுதிகளையும் யானை வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வுப் பணிகளை முடித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானை வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கி விசாரணையை டிச.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




