
மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறைகேடு: 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மத்திய சிறை - கோப்புப் படம்
அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் சிறைக் கைதிகள் உரிமைகள் மைய இயக்குநரும், வழக்குரைஞருமான பி.புகழேந்தி தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான உறைகள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரி பொருள்கள், மருத்துவ உதவிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், இதற்காக கைதிகளுக்கு ஊதியம் கொடுத்தது போலவும் போலியான கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி கணக்குகள் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சுமாா் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேநேரம் இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் ஊழல் தடுப்புத் துறை வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், புழல் சிறையில் தண்டனை கைதியாக இருந்துவரும் புதுச்சேரியைச் சோ்ந்த முருகையன் என்பவரின் மனைவி கோகிலா என்பவா் தாக்கல் செய்த மனுவில், சிறை பள்ளியில் உதவியாளராக பணியாற்றிய தனது கணவருக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கோரியிருந்தாா்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில்,போலி கணக்கு காட்டி ரூ.100 கோடி ஊழல் செய்தது தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு, ஊழல் தடுப்புத்துறை தரப்பில், விரிவான விசாரணையை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை. விரைந்து விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து நான்கு மாதங்களில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா். இந்த உத்தரவை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை தொடரலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



