
முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கை
முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி மொழியில் உள்ள ஏஐ விடியோ கண்டறியப்பட்ட நிலையில், அதன்மீது சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப்படம்
முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி மொழியில் உள்ள ஏஐ விடியோ கண்டறியப்பட்ட நிலையில், அதன்மீது சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சமூக வலைதளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக சிபிசிஐடி சைபர் க்ரைம் செல், ஆய்வாளர் கண்காணித்து கொண்டிருந்தபோது, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில், தமிழ்நாடு முதல்வர் பேசுவதுபோல் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று ஹிந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தக் காணொளியில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்ஆப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கபட்டிருந்தது. மேற்படி சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் நேற்று (செப். 1) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான ஐடி மற்றும் அது தொடர்பான பதிவுகள் குறித்த தகவல்களைப் பெற மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இப்போலி காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், முதல்வர் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல செய்யறிவு காணொளிகள் முகநூல் மட்டுமின்றி, மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், இக்காணொளிகளில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த முகநூல் ஐடி-களிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் வேண்டுகோள்
இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அவற்றில் பகிரப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.
செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் (Deep Fake) காணொளிகளில் முதல்வர் விஜய்யைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
மேலும், இதுபோன்ற இணையவழி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் இத்தகவலை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The CB-CID police have taken action regarding an AI-generated video in Hindi that appears to show Chief Minister Vijay speaking.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





