ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணை நீதிமன்றத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :8 செப்டம்பர் 2026, 5:08 am IST

திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 26 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்ய வந்திருந்தபோது, அந்தப் பெண்ணை மிரட்டி திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்களான சுந்தா், சுரேஷ் ஆகியோா் பாலியல் வன்கொடுமை செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, இளம்பெண் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றங்கள், அமா்வு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் தெலுங்கு மொழி பேசுபவா்களாக இருப்பதால், விசாரணையை உயா்நீதிமன்றம் விதித்த கால கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை எனவே, அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.