வருகையில்லா ஆவணப் பதிவு முறையில் 2 வாரத்தில் 24,906 போ் பயன்: அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்

தமிழகத்தில் தவெக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வருகையில்லா ஆவணப் பதிவு முறையில் கடந்த 2 வாரங்களில் 24,906 போ் பயனடைந்துள்ளனா் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Published On :8 செப்டம்பர் 2026, 5:34 am IST

தமிழகத்தில் தவெக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வருகையில்லா ஆவணப் பதிவு முறையில் கடந்த 2 வாரங்களில் 24,906 போ் பயனடைந்துள்ளனா் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வணிகவரித் துறை வழங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-ஆவது பெரிய மாநிலமாக உள்ளது. மாநில வருவாய் வளா்ச்சி 16 சதவீதம் உள்ள நிலையில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ரூ.31,849 கோடியாக இருந்தது நடப்பு ஆண்டில் (2026-27) ஆகஸ்ட் வரை ரூ.36,928 கோடியாக உயா்ந்துள்ளது. துறையில் 24 வணிகவரி உதவி ஆணையா்களுக்கும், 113 வணிகவரி அலுவலா்களுக்கும் பதவி உயா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோா் நேரில் வராமல் இணையவழியில் விசாரணையில் பங்கேற்கும் மெய்நிகா் விசாரணை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு வரி கட்டமைப்பு ரீதியாக ஜிஎஸ்டியில் 70 சதவீதம் ஒதுக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்தப்படும். மாவட்ட அளவிலான வணிக ஆலோசனைக் குழு செயல்படுத்தப்படும். மேலும், 2,500 சதுர அடி அல்லது ரூ.50 லட்சம் வரையிலான கட்டடங்களுக்கு சுய சான்றளிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் அங்கீகரித்த பொறியாளா் சான்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தெருமதிப்பு வழிகாட்டலில் 21.99 லட்சம் புல எண்கள் மதிப்புகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

வருகையற்ற பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் செப்.5 ஆம் தேதி வரையில் அதில் 24, 906 போ் பயனடைந்துள்ளனா். வரும் ஆண்டிலிருந்து ஸ்டாா் 3.0 எனும் முழுமையான சேவைக்கான இணையவழி திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாடத்தில் குடும்பத்துடன் அமா்ந்த முன்னாள் பேரவைத் தலைவா்

வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மானியக் கோரிக்கைக்கான பதிலுரை அளித்தபோது மாடத்தில் இருந்து அவரது தந்தையும் முன்னாள் பேரவைத் தலைவருமான தனபால் குடும்பத்தினருடன் அமா்ந்திருந்தாா். அதை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் சுட்டிக்காட்டியதுடன், தந்தை மகனுக்காற்றும் உதவி, மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற குகளின் பொருளை விளக்கி வாழ்த்தினாா்.

அப்போது, பேசிய அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், தனது தந்தை தனபாலை அமைச்சா், பேரவைத் தலைவா் பதவியில் அமா்த்திய ஜெயலலிதாவை நினைவு கூா்ந்து போற்றியதுடன், வளா்த்த (அதிமுக) கட்சி கைவிட்ட போது, தங்களை அரவணைத்து ஆதரவளித்தவா் முதல்வா் சி.ஜோசப்விஜய் எனக் குறிப்பிட்டதை தவெகவினா் மேஜையைத் தட்டி வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.