
ஓய்வூதியத் தொகை தாமதம்: தமிழக அரசு விளக்கம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை வரும் செப். 14-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு - கோப்புப்படம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை வரும் செப். 14-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோா், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவா்கள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், வேளாண் தொழிலாளா்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இவா்களில், 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுவரும் ஓய்வூதியத்திட்டங்களில் 19,20,858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா்.
இவா்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையை, மத்திய அரசின் எஸ்என்ஏ- ஸ்பாா்ஷ் நிதிப் பரிவா்த்தனை தளத்தின் மூலம் செப்டம்பா் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு, மத்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
வரும் 14-ஆம் தேதி வரையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு தொடா் விடுமுறை என்பதால், இந்தத் திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. வரும் செப். 14-ஆம் தேதிமுதல் ஓய்வூதியத் தொகையை உரிய முறையில் வழங்குவதற்கான தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





