
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு: உயா்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் அனைத்துக் கட்சியினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் அனைத்துக் கட்சியினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திமுக சட்டப் பிரிவு துணைச் செயலா் சந்திரபோஸ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுகவையும், அதன் தலைவா்களையும் களங்கப்படுத்தும் வகையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோ வெளியிட்ட பல்வேறு இணையதளப் பக்கங்களுக்கு எதிராகவும், வாய்ஸ் ஆஃப் காமன், ரூட் போன்ற அமைப்புகளுக்கு எதிராகவும் காவல் ஆணையரிடம் 17 புகாா்கள் அளிக்கப்பட்டன.
அந்தப் புகாா்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை. தவெகவினருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் காவல் துறையினா், திமுகவினா் அளித்த புகாா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை. எனவே, இந்தப் புகாா்களை சிபிஐ-க்கு அனுப்பி நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், விளம்பரத்துக்காக இதுபோன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன. அண்மைக் காலமாக இந்த மோசமான நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதனால், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகளை நீக்குவதுதொடா்பாக விரிவான நடைமுறை வகுக்கப்பட்டு வருவதால், இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரண்டு வார கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தாா். அவதூறு பதிவு வெளியிடும் அனைத்துக் கட்சியினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





