
யுபிஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்
யுபிஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...

அன்புமணி - எக்ஸ்
வணிகர்களையும், மறைமுகமாக மக்களையும் பாதிக்கும் யுபிஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனிநபர்கள் இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும், ரூ.2000-க்கும் குறைவான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. யுபிஐ மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக பணம் பெறும் சிறு வணிகர்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை; மாறாக, இந்தக் கட்டணம் வணிகர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இதனால், தனிநபர்களுக்கு எந்த வகையிலும் நேரடியாக பாதிப்பு இல்லை. மாதம் ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு இல்லை.
ஆனால், இந்த முறையில் பொதுமக்கள்தான் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள். பெரு வணிகர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு லாபம் குறைவதை அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, பொருள்களின் விலைகளை உயர்த்தி, இந்தக் கட்டணத்தை மறைமுகமாக பொதுமக்கள் மீது தான் சுமத்துவார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போதும் கூட இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு பல இடங்களில் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை மூலம் கணிசமான அளவில் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டு, வெளிப்படையான பணப் பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள இலாபத்துடன் ஒப்பிடும் போது, இந்த சேவையை இலவசமாக வழங்குவதால் ஏற்படும் இழப்பு பெரிதல்ல.
எனவே, ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். வெளிப்படையான பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Summary
UPI Transaction Fee That Will Affect Traders-Indirectly Burden the Public!-Anbumani Ramadoss|
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






