தமிழக காங்கிரஸில் பூசல்? பிரவீண் சக்ரவர்த்தி - செல்வப்பெருந்தகை இடையே தொடரும் வார்த்தைப் போர்!

காங்கிரஸ் எம்பி பிரவீண் சக்ரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை இடையே தொடரும் வார்த்தைப் போரால் தமிழக காங்கிரஸில் பூசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Praveen Chakravarty - Selvaperunthagai

பிரவீண் சக்ரவர்த்தி - செல்வப்பெருந்தகை

Published On :

காங்கிரஸ் எம்பி பிரவீண் சக்ரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை இடையே தொடரும் வார்த்தைப் போரால் தமிழக காங்கிரஸில் பூசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய்தான் என்று தவெகவினரும், ராகுல் காந்திதான் என்று காங்கிரஸினரும் மாறிமாறிக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசுகையில், “ராகுல் காந்திதான் பிரதமர் என்றால், அவர்தான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த கூட்டணியில் ஏன் இருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீண் சக்கரவர்த்தி, “கூட்டணிக் குறித்து கருத்து சொல்ல செல்வப் பெருந்தகை யார்? இதற்கு முன் என்னவாக வேண்டுமானாலும் அவர் இருந்திருக்கலாம். இப்போது அதெல்லாம் தேவையா?” எனப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தியை சாடும் விதமாக செல்வப்பெருந்தகை தனது சமூக ஊடகப் பதிவில், “கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.

வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.

மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி? அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.

உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.

முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.

பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.

காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.

காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.

உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவரின் வார்த்தைப் போரால் தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

It is reported that a rift has emerged within the Tamil Nadu Congress due to the ongoing war of words between Congress MP Praveen Chakravarty and former MLA Selvaperunthagai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.