தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் பிற கட்சித் தலைவர்கள்: அதிமுக, பாஜக எதிர்ப்பு
தவெகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றிருப்பதற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...
தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் - X | Vaiko
தவெகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றிருப்பதாக அதிமுகவும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்களும் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி. இன்பதுரை கூறியிருப்பதாவது, "வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு கட்சியான தவெகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது எந்த சட்ட அடிப்படையில்?
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒரு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக தனது சொந்த கட்சியின் உறுப்பினரையே நியமிக்க முடியும்.
மேலும், நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் அறிவிப்பிலிருந்து 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்சமயம் அந்த காலக்கெடு முடிந்துவிட்ட பிறகு, இனி இவர்கள் தங்கள் கட்சிகளின் சார்பில் புதிதாக விண்ணப்பித்து தங்கள் பெயரில் அனுமதி பெற்று பிரிவு 77-ன் செலவு விலக்கைப் பெற முடியாது.
தங்களது சொந்த கட்சித் தலைவர்களாக அல்லது கூட்டணிக் கட்சி தலைவர்களாக தவெக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய இவர்கள் அனுமதிக்கப்பட்டால், நட்சத்திரப் பேச்சாளர் செலவு விலக்கு இனி இவர்களுக்கு பொருந்தாதது.
எனவே, தேர்தல் ஆணைய விதிகளின்படி இவர்களின் சம்பந்தப்பட்ட உரிய பிரசாரச் செலவுகள் மொத்தமும் தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே சட்டம்.
இவர்களின் பிரசார செலவுகள், தவெக வேட்பாளர்களின் கணக்கில் அவ்வாறு சேர்க்கப்படாமல் இருந்தாலோ, இதன்மூலம் தவெக வேட்பாளர்களின் சட்டபூர்வ தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டாலோ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 – பிரிவு 123(6) கீழ் ஊழல் நடவடிக்கை என்பதே தெளிவான சட்டநிலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலுக்கு பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜனும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்காக தவெகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதல்வர் விஜய்யுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், விசிக கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் எம்.பி., வன்னி அரசு, சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
நட்சத்திரப் பேச்சாளர்களைப் பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாகல் குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம், தவெக கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தவெகவின் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்துள்ளது.
இது தமிழக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும், சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி, ஆளுங்கட்சியான தவெகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் நடைபெறக்கூடிய மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே, இதேபோன்று ஆம் ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திரப் பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது.
எனவே, தமிழக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள தவெகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Summary
AIADMK and BJP oppose the inclusion of leaders from other parties in TVK's list of star campaigners
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







