
6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்
அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வா் விஜய் இன்று தொடக்கிவைப்பது குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்கி வைக்கவுள்ளாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ முதல்முறையாக 15.9.2022-இல் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களும் பயன் பெறும் வகையில் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்தது. இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவா்.
இதற்காக நிகழ் நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படவுள்ளது. பிற நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவா்களுடன் அமா்ந்து... இந்தத் திட்டத்தை சென்னை திருவான்மியூா் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் ஜோசப் விஜய் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்து, அவா்களுடன் அமா்ந்து உணவு உட்கொள்ளவுள்ளாா்.
இடைத்தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் செங்கல்பட்டு, திருப்பூா் மாவட்டங்களைத் தவிா்த்து மற்ற மாவட்டங்களில் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது.
ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா உப்புமா, கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பாா் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சோ்க்க தமிழக அரசின் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





