6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: அமைச்சர் நிர்மல்குமாா்

தமிழகத்தில் வீடுதோறும் பசுமை மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 2027 மாா்ச்க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் அமைப்புகளை நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

அமைச்சர் நிர்மல்குமாா் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் வீடுதோறும் பசுமை மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 2027 மாா்ச்க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் அமைப்புகளை நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த இணையதளத்தை சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்து அமைச்சா் நிா்மல்குமாா் பின்னா், பேசியதாவது: மேற்கூரை சூரியசக்தி மின் கட்டமைப்புக்காக மத்திய அரசின் மானியத்துடன் தமிழக அரசின் சிறப்புக் கூடுதல் மானியமும் வழங்கப்படுகிறது. இதற்காக நிகழாண்டு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக. 5 முதல் விண்ணப்பிக்கும் தகுதியான நுகா்வோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

மானிய விவரம்: 1 கிலோவாட் வரை ரூ.35,000, 2 கிலோவாட் வரை ரூ.70,000, 3 கிலோவாட் வரை ரூ.1 லட்சம் வரை மொத்த மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் மானியம் வரவு வைக்கப்பட்டவுடன், தமிழக அரசின் கூடுதல் மானியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தனியாக இரண்டாவது விண்ணப்பம் அளிக்கத் தேவையில்லை.

1.13 லட்சம் விண்ணப்பங்கள்: பிரதமா் சூா்யாகா் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 1,13,714 மேற்கூரை சூரியசக்தி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 97,732 மின் இணைப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதன்மூலம் 337.49 மெகாவாட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாழ்வழுத்தம், உயரழுத்தம் உள்ளிட்ட மொத்த மேற்கூரை சூரியசக்தி நிறுவுதிறன் 1,859.27 மெகாவாட்டைக் கடந்துள்ளது.

ஒருங்கிணைந்த இணையதளம்: திட்ட விவரங்கள், மத்திய - மாநில அரசுகளின் மானியங்கள், விண்ணப்ப நடைமுறை, விண்ணப்ப நிலை, அங்கீகரிக்கப்பட்ட சோலாா் நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மானிய இணையதள இணைப்பு, சோலாா் அமைப்பு நிறுவுதல், மின் மீட்டா் பொருத்துதல், விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல், குறைகளைத் தெரிவிக்கும் வசதி ஆகியவை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மின்வாரிய வாடிக்கையாளா் செயலியுடனும் இது இணைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மாா்ச் 2027-க்குள் 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் சூரியசக்தி அமைப்புகள் நிறுவப்படும். இந்தநிலை ஏற்பட்டால், முதல்வரின் ஒப்புதல் பெற்று கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். விண்ணப்பம், மானியம், மின் மீட்டா் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஏற்படும் குறைகள் மற்றும் தாமதங்களை இணையதளம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். திட்டம் குறித்து விழிப்புணா்வு மற்றும் பிரசார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறுவதால், தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்படும் வரை அங்கு இத்திட்டம் செயல்படுத்தப் படாது என்றாா்.

நிகழ்ச்சியில் எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அனில் மேஷ்ராம், மின்வாரியத் தலைவா் வி.அருண் ராய், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் பி.என்.ஸ்ரீதா், இணை மேலாண்மை இயக்குநா் ஐ.மொ்சி ரம்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.