தமிழும் தொழில்நுட்பமும் இணையும் 24 மணி நேர ஹேக்கத்தான்: செம்மொழி நிறுவனத்தில் இன்று தொடக்கம்
தமிழும் தொழில்நுட்பமும் இணையும் 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி "ஆரெக்ஸ் 26' தொடர்பாக...

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - CICT
சென்னை: தமிழ் மொழி, டிஜிட்டல் புதுமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி "ஆரெக்ஸ் 26' என்ற பெயரில் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செம்மொழி நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறியதாவது:
தமிழ் மொழி, எண்ம புதுமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் இந்த ஹேக்கத்தான், தமிழ் கற்றல், ஆய்வு, மின்னாக்கம், பாதுகாப்பு மற்றும் அறிவு அணுகலை மேம்படுத்தும் நடைமுறை தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
செம்மொழி நிறுவனத்தின் மின் நூலகம் சார்பில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, தென்னிந்தியாவின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து 60 அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் மூன்று மாணவர்கள் இடம்பெற்று, தங்களுக்கு வழங்கப்பட்ட பிரச்னைத் தலைப்பின் அடிப்படையில் தொடர்ந்து 24 மணி நேரம் பணியாற்றி, செயல்படும் முன்மாதிரியை (புரோட்டோடைப்) நடுவர்கள் முன்னிலையில் வழங்கவுள்ளனர்.
"ஆரெக்ஸ் 26' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஹேக்கத்தானில் ஓர்க்ஷாப் அண்ட் மேனேஜ்மெண்ட் போர்டல், தமிழ் நூல்கள் மற்றும் சுவடிகளை மின்னாக்கம் செய்யும் ஓசிஆர், தமிழ்ச் சொற்களின் பொருள் மற்றும் பயன்பாட்டை இலக்கிய ஆதாரங்களுடன் ஆராயும் வேர்டு நெட், தொடக்க நிலையிலிருந்து தமிழ் கற்க உதவும் லேர்னிங் போர்டல், பல மொழிகளில் கேள்விகளைப் புரிந்து ஆதாரங்களுடன் பதிலளிக்கும் ஏஐ நாலேஜ் சாட்பாட், செம்மொழித் தமிழ் சார்ந்த புதுமையான தீர்வுகளுக்கான ஓபன் இன்னொவேஷன் என மொத்தம் ஆறு தொழில்நுட்பப் பிரிவுகள் இடம்பெறுகின்றன.
இந்த ஹேக்கத்தானில் வெறும் யோசனைகள் மட்டுமின்றி, செயல்படும் தொழில்நுட்ப முன்மாதிரிகளை உருவாக்குவது முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள் உருவாக்கும் சிறந்த தீர்வுகள் எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தப்பட்டு நடைமுறை பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
மேலும், இந்த நிகழ்வு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு , இயற்கை மொழி செயலாக்கம் (என்எல்பி), எண்ம நூலகங்கள், மொழி தொழில்நுட்பம், கல்வி சார்ந்த தளங்கள் போன்ற துறைகளில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. செம்மொழித் தமிழ் மரபையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து, தமிழின் எண்ம எதிர்காலத்துக்கு இளம் தலைமுறையை பங்களிக்கச் செய்வதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 60 அணிகள் பங்கேற்றுள்ளன. நிறைவாக 6 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் 18 அணிகளுக்கு முதல் பரிசு ரூ.25,000, 2}ஆம் பரிசு ரூ.15,000, 3}ஆம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும் என்றார் அவர்.
Summary
A 24-hour hackathon merging Tamil and technology: Begins today at the CICT
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






