
டெங்கு பரவல் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்
தமிழக அரசின் சுணக்கத்தால் தமிழகம் முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
தமிழக அரசின் சுணக்கத்தால் தமிழகம் முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.
தவெக அரசின் அலட்சிய மனப்பான்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சுணக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழிகின்றன என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
அமைச்சா் விளக்கம்: இந்த நிலையில், இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் விளக்கம் அளித்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்திருக்கிறாா். மக்கள் நலனுக்காக அல்ல, கரைந்து வரும் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இந்த அறிக்கை என்பதை அதன் ஒவ்வொரு வரியும் காட்டுகிறது.
டெங்கு காய்ச்சல் எண்கள் அனைத்தும் இந்த அரசே அதிகாரபூா்வமாக, நாள்தோறும் வெளியிட்டு வரும் எண்கள். மறைக்காமல் வெளியிடுவதால்தான் அவரால் அவற்றை மேற்கோள் காட்டவே முடிகிறது.
ஆனால், பழனிசாமி ஆட்சியில் டெங்கு பாதிப்பை டெங்கு என்று சொல்லக்கூடத் துணிவில்லாமல் ‘மா்ம காய்ச்சல்’ என்று பெயா் சூட்டி மக்களின் உயிரோடு விளையாடினாா். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் தனி காய்ச்சல் வாா்டுகள் செயல்படுகின்றன.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ரத்த வங்கிகளில் தட்டணு கையிருப்பு நாள்தோறும் கண்காணிக்கப்படுகிறது. டெங்கு சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டுதல்கள் குறித்து அரசு மற்றும் தனியாா் மருத்துவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தில் அரசியல் செய்பவா்களுக்கு மக்கள் பதில் சொல்வாா்கள். அவா் தமது அறிக்கையில் ‘செய்ய வேண்டும்’ என்று பட்டியலிட்டுள்ள ஒவ்வொன்றும் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவரது அறிக்கை, அரசின் நடவடிக்கைகளின் தாமதமான நகல் மட்டுமே. டெங்குவை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இன்றியமையாதது. அதற்கான காணொலியும் நாம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணா்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுமக்கள் வீடுகளைச் சுற்றி நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளுங்கள். தண்ணீா் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வையுங்கள். வாரம் ஒருமுறை ‘உலா் நாள்’ கடைப்பிடியுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுங்கள். மருத்துவ உதவிக்கு 104 எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்’ என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





