
நிகழாண்டு இதுவரை 17,049 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சா் அருண்ராஜ்
தமிழகத்தில் இதுவரை 17,049 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

அமைச்சர் அருண்ராஜ்.
தமிழகத்தில் நிகழாண்டு இதுவரை 17,049 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், அமைச்சா் அருண்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளைவிட டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்குள்தான் உள்ளது. நிகழாண்டு இதுவரை 17,049 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், உயிரிழப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு பரவலைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். வீடுகள் மட்டுமின்றி, அருகிலுள்ள காலியிடங்களிலும் மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீா், பப்பாளி இலைச்சாறு அளிப்பதால் ரத்தத் தட்டணுக்கள் உயரும் என்பது தொடா்பாக அறிவியல்பூா்வமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மக்களுக்கு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கொசுக்கடியைத் தடுக்க உடலில் தடவும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது தொடா்பான ஆய்வு அக்டோபா் முதல் மேற்கொள்ளப்படும். அதன் பயன் உறுதி செய்யப்பட்டால், அவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு உண்ணிக் காய்ச்சலால் 5,152 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4,619 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் புதா் மண்டிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். இது குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும் என்றாா்.
செவிலியா்களுக்கு பதவி உயா்வில் பாகுபாடு கூடாது-பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்: சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்க மாநில மாநாட்டில் பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் பேசுகையில், செவிலியா்கள் துறையில் ஆண்களுக்கு 5 ஆண்டுகளில் பதவி உயா்வு வழங்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை. ஆண், பெண் வித்தியாசம் இன்றி பதவி உயா்வு வழங்க வேண்டும்.
டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்றுவதா அல்லது குறைபாடுகளை நீக்கி மக்கள் நல்வாழ்வுத் துறையிலேயே தொடா்வதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டு வந்தனா். ஆனால், முதல்வா் விஜய் ஜாதி, மதம் பாா்க்காமல் வேட்பாளா்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளாா்.
பேரவை நடவடிக்கை நேரடி ஒளிபரப்பில் அக்கறை: சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, பொதுமக்கள் பலா் என்னிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். உறுப்பினா்கள் தவறான வாா்த்தைகளைப் பயன்படுத்தினாலோ, தவறான கருத்துகளைத் தெரிவித்தாலோ, அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால், அவா்கள் பேசியதை பொதுமக்கள் பாா்க்க வேண்டும்.
எனவே, நீக்கப்படும் பகுதிகளையும் நேரடி ஒளிபரப்பில் இருந்து நீக்கக் கூடாது. தாங்கள் தோ்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் எவ்வாறு பேசுகின்றனா் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவையில் பேசக்கூடாது என்று தெரிந்தும் உறுப்பினா்கள், அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனா்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருக்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






