திமுகவினரை பார்த்தால் வழக்கு; அதிமுகவினரை பார்த்தால் பெட்டி: தவெக மீது உதயநிதி கடும் தாக்கு
அதிமுகவினரை தவெகவினர் விலைக்கு வாங்குவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியது குறித்து...
உதயநிதி | விஜய் - கோப்புப் படம்
தவெக ஆட்சியில் திமுக எம்எல்ஏ-க்கள் மீது வழக்கு போடுவதையும், அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு பெட்டி வழங்குவதையும் ஆளுங்கட்சி வாடிக்கையாக வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தாராபுரம் நத்தம்பாளையத்தில் திமுக தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "திமுகவுடன் கூட்டணியில் இருந்து, திமுக தலைவரின் பெயரைச் சொல்லி வெற்றிபெற்ற கட்சிகளில் ஒரு சிலர் சொல்லிவிட்டுச் சென்றனர். ஒரு சிலர் சொல்லாமலேயே திருட்டுத்தனமாகச் சென்றுவிட்டனர். முதுகில் குத்திய துரோகிகளை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏ (சத்யபாமா) உங்களுடைய முதுகில் குத்தியுள்ளார். அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பைக் கொடுக்கப் போகிறீர்களா?
அதிமுக தலைவர்கள் வீடுகளுக்கெல்லாம் முதல்வர் சென்று, ஷோஃபா டெலிவரி செய்தார். அனைத்து கட்சித் தலைவர்கள் வீடுகளுக்கும் ஷோஃபா சென்றதைப் பார்த்தீர்கள். முதல்வரே டோர் டெலிவரி செய்தார். கட்சித் த்லைவர்களுக்கெல்லாம் ஷோஃபா; எம்எல்ஏ-க்களுக்கு பெட்டி.
இந்த ஆட்சியில் திமுக எம்எல்ஏ-க்களை பார்த்தால் வழக்கு போடுகின்றனர். அதே சமயம், அதிமுக எம்எல்ஏ-க்களை பார்த்தால் (தவெக) பெட்டியைக் கொடுத்து, அவர்களை வாங்கி விடுகின்றனர்.
நீங்கள் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தீர்களோ, அவர்கள் இன்று கட்சிமாறி, அவர்களே மீண்டும் வாக்கு கேட்டு உங்களிடம் வருகின்றனர். இதற்குக் காரணம், அதிமுகவில் போட்டியிட்ட அவர்களுக்கு மீண்டும் நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு. மீண்டும் அந்தத் தவறை செய்யப் போகிறீர்களா?
நீங்கள் ஏற்கெனவே வாக்களித்து, இப்போது ஆளுங்கட்சியில் சேர்ந்திருப்பவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அவர்கள் சட்டப்பேரவையில் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
சட்டப்பேரவையில் எம்எல்ஏ-க்கள் அவர்கள் தொகுதிகள் குறித்துதான் பேசுவார்கள். சட்டப்பேரவையில் முதல்வர் (விஜய்) பேசியதாய் சரித்திரமே கிடையாது. பிடித்துவைத்த பிள்ளையார்போல அமர்ந்திருப்பார்.
பிரசாரத்தில் நீங்கள் ஏதேனும் சொல்லி விடுவீர்கள். ஆனால், அவர் என் மீது ஏதேனும் வழக்கு போட்டு விடுவார். தண்ணீர் வரவில்லை என்று சொன்னதற்காக என் மீது வழக்கு போட்டு விட்டனர்.
சட்டப்பேரவையில் எம்எல்ஏ-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்களும் முதல்வரும் பதிலளிப்பர். ஆனால், அவர்கள் பாட்டு பாடினால் நாங்கள் என்ன செய்வது? பேரவைத் தலைவர் உள்பட தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் பாட்டு பாடுகின்றனர்.
பேரவைத் தலைவர் ஆக்ஷன் என்று சொன்னதும் முதல்வர் நடிக்கத் தொடங்கி விடுகிறார்.
மதுராந்தகத்தில் தவெக பிரசாரத்தில் விஜய் பேசிய 30 நிமிடங்களில் 32 முறை திமுக திமுக என்று பேசினார். அந்தளவுக்கு எங்கள் மீது அவர்களுக்கு பிரியம்.
முதல்வர் விஜய்யின் பாஷையிலேயே சொல்வதென்றால், இப்போது ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் போட்டியே. ஒன்று மின்வெட்டு; இன்னொன்று அரிவாள் வெட்டு.
அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு, அதிமுக உழைப்பில் வெற்றிபெற்று, பதவியேற்ற 10 நாள்களிலேயே கட்சி மாறி, இன்று மீண்டும் உங்களிடமே வருகின்றனர். சத்யபாமா என்ற பெயரை 'பெட்டி' பாமா என்று மக்கள் மாற்றி விட்டனர். நீங்கள் கடந்த முறை செய்த தவறையே மீண்டும் செய்வீர்கள் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு.
அதிமுகவுக்கு வாக்களித்தால், அவர்கள் மீண்டும் பெட்டி வாங்கிவிட்டு, மீண்டும் கட்சி மாறி விடுவார்கள்" என்று தெரிவித்தார்.
Summary
DMK Leader Udhayanidhi Stalin alleges that TVK is buying over AIADMK members
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



