
நாகர்கோயில் யூ டியூபரின் விடியோக்களைப் பார்த்து திருட்டு! கைதான 3 பேர் கொடுத்த அப்டேட்
நாகர்கோயில் யூ டியூபரின் விடியோக்களைப் பார்த்து திருட்டில் ஈடுபட்டதாக கைதான 3 பேர் கூறியிருப்பதாக வெளியான தகவல் பற்றி..

நாகர்கோயில் யூ டியூபர் வீடு
நாகா்கோவிலில் பெண் யூ டியூபா் வீட்டில் பூட்டை உடைத்து 118 தங்க, வைர நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யூ டியூபர் போடும் பதிவுகளைப் பார்த்து அவரது வீட்டில் திருடியதாகவும் அவர்கள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூ டியூபர் விடியோவில் வெளியிட்ட தகவல்கள் மூலம், மிக எளிதாக வீட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம், நாகா்கோவிலில் மிகவும் பிரபலமான பெண் யூடியூபா் வீட்டின் கதவை உடைத்து 118 சவரன் தங்க, வைர நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த திருடர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை, ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவரும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசக்கிபாண்டி, யூடியூபர் மதுமிதாவை, சமூக வலைத்தளத்தை பின்தொடர்ந்து வருவதாகவும் அவர் வெளியிடும் விடியோக்களைப் பார்த்தே திட்டம் தீட்டி இந்த திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அவர் விடியோவில் வெளியிட்ட பல தகவல்கள், திருட்டுச் சம்பவத்துக்கு உதவியாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திருட்டுச் சம்பவம் பற்றி..
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(33). ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமணப்பொருள்கள் வியாபாரி. இவரது மனைவி மதுமிதா (28). பிரபல யூடியூபா். தனது தொழில் தொடா்பான முதலீடுகளை வினோத்குமாா் கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்துள்ளாா். இதற்காக நாகா்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியில் வீடு வாங்கி குடும்பத்துடன் கடந்த ஓராண்டாக குடியிருந்து வருகிறாா்.
இந்நிலையில், அவா் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன், பொருள்கள் வாங்குவதற்காக வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு திருநெல்வேலிக்குச் சென்றாா். பின்னா், இரவு 11.45 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவை திறக்கமுடியவில்லையாம். அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம்.
மேலும், பின்புற மரக்கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 118 சவரன் தங்க, வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தனவாம்.
இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் இளஞ்செழியன்(நாகா்கோவில்), பிரகாஷ் (கன்னியாகுமரி) மற்றும் போலீஸாா் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு விடப்பட்டதுடன், விரல் ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இந்தத் திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதிக அளவில் பணத்தை கையில் வைத்திருப்பது, நகைகள்அணிந்திருப்பது, வீட்டின் பூஜை அறையில் கட்டுகட்டாக பணத்தை வைத்து பூஜை செய்வது போன்ற விடியோ காட்சிகளை தனது யூ டியூப் சேனலில் மதுமிதா பதிவிட்டு வந்துள்ளார். எனவே, அவரது யூடியூப் சேனலை பின்தொடா்பவா்களே திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





