
பண்டிகை கால கொள்ளை ஆரம்பம்! ஆம்னிப் பேருந்துகளில் எகிறிய டிக்கெட் விலை!
ஆம்னிப் பேருந்துகளில் எகிறிய டிக்கெட் விலை பற்றி...

கோப்புப்படம் - Express
காந்தி ஜெயந்தி, ஆயுதப் பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து தொடர் விடுமுறை வரும் நிலையில், தனியார் ஆம்னிப் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 4,900 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 1,000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது.
பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாள்கள் என தொடர் விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல், காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, சொந்த ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பலர் ஆம்னிப் பேருந்துகளில் பயணம் செய்ய முன்னுரிமை வழங்குகிறார்கள்.
இந்த நிலையில், வருகின்ற வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து மதுரை, கோவை போன்ற நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆம்னிப் பேருந்துகளில் வழக்கத்துக்கு மாறாக பல மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து சென்னை திரும்புவதற்கு கட்டணமாக ரூ. 3,000 வரை வசூலிக்கப்படுகிறது.
Photo: Redbus website
கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு ரூ. 4,300 வரையிலும், மலைப் பகுதியான உதகையிலிருந்து சென்னைக்கு ரூ. 3,500 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Photo: Redbus website
கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும், முன்பதிவு தளங்களில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ஆயுதப் பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, அக்டோபர் 16 ஆம் தேதி சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கோவை, உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணமும் பலமடங்கு அதிகமாகவே வசூலிக்கப்படுகிறது.
Photo: Redbus website
20 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தளங்களில் தனியார் பேருந்துகள் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து விடுமுறை வரும் நிலையில், ஆம்னிப் பேருந்துகள் கட்டண உயர்வை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிக கட்டணம் குறித்த போக்குவரத்துத் துறை புகார் எண் 1800 425 6151
Summary
Festive season - Soared ticket prices on omnibus buses in Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






