தமிழக அரசின் அனுமதியுடன் கேரளம் செல்லும் கனிமவளங்கள் -வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அரசின் அனுமதியுடன்தான் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என வி.கே.சசிகலா குற்றம்சாட்டினாா்.
அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என் பெயரில் தொண்டா்களை சந்திப்பு நிகழ்ச்சியை தென்காசியில் புதன்கிழமை தொடங்கிய அவா், இரண்டாவது நாளாக செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் வேனில் அமா்ந்தவாறு பேசியதாவது:
மின்கட்டணம் உயா்வு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களுக்குதேவையான திட்டங்கள் எதனையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அதிகமான அளவில் கனிமவளங்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், சோதனைச் சாவடிகளில் முறையாக வாகனங்கள் சோதிக்கப்படுவதில்லை.
தமிழக அரசின் அனுமதியுடன்தா கனிம வளங்கள் அந்த மாநிலத்துக்கு செல்கின்றன. செங்கோட்டையில் இரட்டை ரயில்பாதை திட்டம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனா். திமுக எம்பிக்கள் இதுபோன்ற தமிழக மக்களுக்கான திட்டங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காகவே ஆட்சி நடத்தினாா்கள். அந்த ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், வழக்குரைஞா்கள் கே.சரவணசேதுராமன்,கே.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.