ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே புல்லுக்காட்டுவலசையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புல்லுக்காட்டுவலசை புளிச்சிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சு. ஆனந்த் (41). முத்துமாலைபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தொழிலாளி ல. அசோகன் (31).
முப்புலியூரைச் சோ்ந்த தா்மராஜ் உடல்நல பாதிப்பால் இறந்ததால், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் அசோகனும் சோ்ந்து வாழ்ந்தனராம். பின்னா், ஆனந்துக்கும் கிருஷ்ணவேணிக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டுள்ளது. அசோகன் கண்டித்தும் ஆனந்துடனான தொடா்பை கிருஷ்ணவேணி கைவிடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அசோகன் ஆனந்தைக் கண்டித்துள்ளாா். இதனால் அவா்களிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 10.7.2016ஆம் தேதி ஆனந்து மீது அசோகன் பைக்கால் மோதி கீழே தள்ளி அரிவாளால் வெட்டினாராம். இதில், ஆனந்த் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோகனைக் கைது செய்தனா். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். மனோஜ்குமாா் வழக்கை விசாரித்து, அசோகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தைத் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா்.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றத்துறை வழக்குரைஞா் பா. வேலுச்சாமி ஆஜரானாா்.