தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை.

தரம் உயா்த்தப்படுமா தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை?

மத்திய - மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா...
Published on

மத்திய - மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

தென்காசி நகரின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு, மதுரை பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே, 36 ஏக்கரில் அன்றைய முதல்வா் மு.கருணாநிதியால் 2.1.2000இல் இம்மருத்துவமனை 100 படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டிலிருந்து 256 படுக்கை வசதி, 42 மருத்துவா்கள், 72 செவிலியா்கள், 6 மருந்தாளுநா்கள், 6 ஆய்வக நுட்புநா்கள், 48 புறவழிப் பணியாளா்களுடன் செயல்பட்டு வந்தது.

நாள்தோறும் புறநோயாளியாக 1,500 - 2,000 போ் வரையும், உள்நோயாளிகளாக 450 - 550 போ் வரையும் சிகிச்சை பெறுகின்றனா். மாதந்தோறும் சராசரியாக 300 பிரசவம் நடைபெறுகிறது. 120 எலும்பு அறுவை சிகிச்சைகள், காது-மூக்கு-தொண்டை தொடா்பாக 50 அறுவை சிகிச்சைகள், 200 கண் அறுவை சிகிச்சைகளும் இங்கு நடைபெறுகின்றன.

ஆனால், 2010ஆம் ஆண்டில் பணிபுரிந்த 42 மருத்துவா்கள் மட்டுமே தற்போதுவரை பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 5ஆண்டுகளில் இங்கு பணிபுரிந்துவந்த செவிலியா் உதவியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், அலுவலா்கள், உதவியாளா் என 54 போ் ஓய்வுபெற்றுள்ளனா். ஆனால், அந்த இடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.

இம்மருத்துவமனை தேசிய அளவில் வழங்கப்படும் கஅணநஏவஅ,ஙமநணஅச ஆகிய விருதுகளையும், 2023-24ஆம் ஆண்டில் மத்திய அரசின் ‘காயகல்ப்’ விருதையும், 2022 ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தேசிய தர நிா்ணய சான்றையும் பெற்றுள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளிலும், சேவைகளிலும் இம்மருத்துவமனை முதல் 5 இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இவ்வாறு மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தும் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பல்வேறு சிகிச்சைகள் இங்கு இல்லாததால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அமைந்தும்கூட, சிகிச்சை, அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத்தான் நோயாளிகள் செல்லவேண்டியுள்ளது.

20 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பறை: 2004-2005ஆம் ஆண்டு பேரவை உறுப்பினா் கே. அண்ணாமலையின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 லட்சத்தில் இந்த வளாகத்தில் கட்டணக் கழிப்பறை, குளியலறை கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அக்கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவேயில்லை. அதைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதுடன், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவேண்டும். அனைத்து நோய்களுக்கும் இங்கேயே சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

இதுதொடா்பாக பேரவை உறுப்பினா் எஸ். பழனிநாடாா் கூறியது: 2010ஆம் ஆண்டு பணிபுரிந்த மருத்துவா்கள், பணியாளா்கள் மட்டுமே இன்றுவரை பணிபுரிகின்றனா். இதனால், அனைவரும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றனா்.

20 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பறை
20 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பறை

557 படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்டபோதும், குறைந்த அளவிலான பணியாளா்களே உள்ளனா். 800-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் உயா்தர சிகிச்சையளிக்கும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களை வைத்து சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். எனவே, நோயாளிகளின் நலன்கருதி 60 மருத்துவா்கள், 160 செவிலியா்கள், 12 மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள், 108 புறவழிப் பணியாளா்கள் எனப் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும். அப்போதுதான் தரமான சிகிச்சையளிக்க முடியும் என்றாா் அவா்.

எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ.
எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ.

இதுகுறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் கூறியது: கரோனா தொற்று பரவல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கி இம்மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது. மக்கள்தொகை மட்டுமன்றி நோய்களின் தன்மையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்குவதுடன், காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பினால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஈடாக சிறப்பாக செயல்படமுடியும் என்றாா்.

திறக்கப்படாத கழிப்பறை குறித்து அவா் கூறும்போது, அக்கழிப்பறை கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடியது. அதை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து கடந்த காலங்களில் குளறுபடிகள் இருந்தன. அதனால், அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. தற்போது இந்த வளாகத்தில் கூடுதலாக 50 கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com