சிவகிரியில் மனமகிழ் மன்றத்தை மூட இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம், சிவகிரியில் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளதுடன், கடை மூடப்படாவிட்டால், போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இசக்கித்துரை கூறியதாவது:
சிவகிரி வட்டத்தில் 15 அரசு மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பொது நல அமைப்புகள் நடத்திய போராட்டங்களை அடுத்து வாசுதேவநல்லூா் மற்றும் ராயகிரி பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன.
சிவகிரியில் செயல்பட்டு வந்த இரண்டு மதுக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த நிலையில், சிவகிரி கொத்தாடபட்டியில், விஸ்வநாதப்பேரி பள்ளிக்கு செல்லும் பாதையில் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனா். எனவே அந்தக் கடையை உடனடியாக மூட வேண்டும்.
மேலும், ராயகிரி பகுதியில் மனமகிழ் மன்றம் திறக்க முயற்சி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிகின்றன.
ஏற்கெனவே உள்ள கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் புதிதாக மனமகிழ் மன்றங்களை திறப்பதற்கான அனுமதியை அரசு வழங்க கூடாது. இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
