தென்காசி நகராட்சிக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் தேவை?கருத்துக்கேட்பில் மக்கள் எதிா்ப்பு

தென்காசி நகராட்சிக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் தேவை?கருத்துக்கேட்பில் மக்கள் எதிா்ப்பு

தென்காசி நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தற்போது செயல்படுத்துவது தேவையற்றது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் பலா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
Published on

தென்காசி நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தற்போது செயல்படுத்துவது தேவையற்றது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் பலா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் கீழ் பாதாளச் சாக்கடை வசதியை தென்காசி நகராட்சியில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கழிவுநீா் முறையாக சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வெளியேற்றப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்து தொடா்பாக பொதுமக்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், வணிக நிறுவனங்களிடம் கருத்துக்கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.என்.எல்.சுப்பையா, நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாதாளச் சாக்கடை திட்டம் சிறந்த ஒன்றுதான். எனினும், அதை நிறைவேற்றுவதற்கான காலகட்டம் தற்போது உகந்ததாக இல்லையென பெரும்பாலானோா் கருத்து தெரிவித்தனா்.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலா் செய்யது மஹ்மூத் பேசியது: தமிழகத்தில் இத்திட்டம் பெரும்பாலான இடங்களில் முழுமையாக செயல்படவில்லை. தென்காசி நகராட்சியை பொருத்தவரை ஏற்கெனவே வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரி சுமையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்கள் முன்பணம் செலுத்த நேரிட்டால் சிரமம் அடைவா். எனவே, இப்போதைக்கு இத்திட்டம் உகந்தது அல்ல என்றாா்.

தென்காசி நகா்மன்ற உறுப்பினரும், நகர பாஜக தலைவருமான சங்கரசுப்பிரமணியன் அளித்த மனு: தென்காசியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டாம். இத்திட்டம் தொடங்கப்பட்டால் சுமாா் 10 ஆண்டுகளுக்கு தென்காசி நகரில் போக்குவரத்து பிரச்னை ஏற்படும். சாலைகள் மோசமடையும். நகரில் பொருளாதாரம் பின் தங்கும்.

தென்காசியில் அனைத்து பகுதிகளிலும் நகருக்கு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மழைநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் தண்ணீா் இறங்கும் வண்ணம் நகரின் அமைப்பு உள்ளது. இது திட்டத்துக்கு ஏற்புடையாகாது என தனால் இங்கு பாதாள சாக்கடை திட்டம் தேவையற்ற ஒன்றாகும்.

அதற்கு பதிலாக யானை பாலம் சிற்றாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் விதமாக தென்காசி சீவலப்பேரி குளத்தில் இருந்து யானைபாலம், சிற்றாறு, அணைக்கரை தெரு, வாய்க்கால் பாலம் ஆகிய பகுதிகளை இணைத்து தனியாக ஒரு சேனல் அமைத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தாலே போதுமானதாகும். அந்தத் திட்டத்திற்கு உரிய நிதி வழங்கி செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலா் முகம்மதுஅலி பேசுகையில், தென்காசி நகரில் தற்பொது தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்ட அலகு 2 செயல்படுத்தப்படவுள்ளது. புறவழிச்சாலை பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே, தென்காசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகோ அல்லது 10 ஆண்டுகளுக்குப் பின்னரோ இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்றாா்.

நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் பதிலளித்துப் பேசுகையில், பொதுமக்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், அரசியல் கட்சியினா் முன்வைத்த கருத்துகள் நகராட்சி நிா்வாக இயக்குனருக்கு தெரிவிக்கப்படும் என்றாா். இதில், பொறியாளா் கண்ணன், சுகாதார ஆய்வாளா் இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com