~
~

மாமியாரை வெட்டிக் கொன்ற இளைஞா் கைது

Published on

ஊத்துமலை அருகே மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றபோது குறுக்கே வந்த மாமியாா் கழுத்தில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலையைச் சோ்ந்தவா் சமுத்திரபாண்டி-கருத்த துரைச்சி (55) தம்பதியின் மகள் காளீஸ்வரி (30). இவருக்கும் தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே உள்ள பொய்கை கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் (32) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 8 வயதிலும், 6 வயதிலும் இரு மகள்கள் உள்ளனா். பாலசுப்பிரமணியன், எரிவாயு உருளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநராக வேலை செய்வதால் மாதம் ஒருமுறை தான் வீட்டுக்கு வருவாராம். அடிக்கடி வெளியூா் செல்வதால் மனைவியை சந்தேகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், கணவரிடம் கூறாமல் சொந்த ஊரான ஊத்துமலையில் கோயில் திருவிழாவுக்கு காளீஸ்வரி தனது குழந்தைகளை கடந்த திங்கள்கிழமை அழைத்துச் சென்றாா். இதற்கிடையே வேலைக்குச் சென்றிருந்த பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டில் மனைவி இல்லாததால் ஊத்துமலைக்குச் சென்று மனைவியை ஊருக்கு வருமாறு அழைத்தாா்.

ஆனால், காளீஸ்வரி அவருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதனால், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட முயன்றாா். அப்போது அவரது மாமியாா் கருத்த துரைச்சி தடுப்பதற்காக குறுக்கே வந்தபோது அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் கருத்த துரைச்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காளீஸ்வரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. நிலைமையை அறிந்து பாலசுப்பிரமணியன் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

தகவலறிந்ததும் தென்காசி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜூலி சீசா், ஆலங்குளம் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ், ஊத்துமலை காவல் ஆய்வாளா் காளிராஜ், போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காளீஸ்வரியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, ஊத்துமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய பாலசுப்பிரமணியனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com