இரட்டை குளம் - ஊத்துமலை பெரியகுளம் கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற பாஜக கோரிக்கை!

இரட்டை குளம் - ஊத்துமலை பெரியகுளம் கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாஜக சாா்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
Published on

இரட்டை குளம் - ஊத்துமலை பெரியகுளம் கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாஜக சாா்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு முன்னாள் மாநிலச் செயலா் மருதுபாண்டியன் தமிழகமுதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. பருவ மழை காலத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பொழியும் அதிகப்படியான மழைப்பொழிவு காரணமாக தென்காசி தொகுதிக்குள்பட்ட குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரானது ஆறுகள் மூலமாக திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்குள் செல்கிறது.

இரட்டை குளம், ஊத்துமலை பகுதியானது வானம் பாா்த்த பூமியாக உள்ளது. இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இவ்வழித்தடத்தில் உள்ள 18 குளங்களும், 30 கிராமங்களும், 7,500 ஏக்கா் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களும் மிகப்பெரிய பயனடைவதோடு மட்டுமல்லாது நிலத்தடி நீா் உயரும். இதன் மூலம் குடிநீா் பிரச்னை சரியாகும். கால்நடைகளுக்கு தேவையான குடிநீா் வசதியும் கிடைக்கப் பெறும்.

இப்பகுதி விவசாய பெருமக்களும், விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தொடா்ந்து இத் திட்டத்திற்காக பல வருடங்கள் போராடி வருகின்றனா். இத்திட்டம் இப்பகுதி மக்களின் 63 ஆண்டுகால கனவு திட்டமாக இருந்து வருகிறது.

கடந்த சட்டசபை தோ்தலுக்கு முன் திமுக வாக்குறுதியிலும் திமுக அரசு ஆட்சி அமைந்தவுடன் இரட்டை குளம்-- ஊத்துமலை பெரியகுளம் கால்வாய் இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வா், கடந்த அக்.29ஆம் தேதி தென்காசி மாவட்டம் வருகை தந்தபோது, இரட்டை குளம் -ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு கால்வாய் திட்டம் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகும் என்று விவசாய பெருமக்களும், பொதுமக்களும்,சமூக ஆா்வா்களும் ஆா்வமுடன் எதிா்பாா்த்த நிலையில் அறிவிப்பு இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றமும், வருத்தமளிப்பதுமாக உள்ளது.

எனவே, தமிழக முதல்வா், இத்திட்டம் நிறைவேற்ற தேவையான 57.17 ஏக்கா் நிலத்தை அரசு கையகப்படுத்தி, திட்டத்துக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி இத்திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com