குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்
குள்ளநரி, எறும்புத் திண்ணி உள்ளிட்ட குறைந்த வரும் வன விலங்குகளை பாதுகாக்க தென்காசி வனக்கோட்டம் சாா்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தென்காசி மாவட்ட வன அலுவலா் ரா.ராஜ்மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி வனக்கோட்டத்தில் தற்போதுள்ள சூழலில் மிகக் குறைந்தளவில் காணப்படும் இனங்களான குள்ளநரி, அலுங்கு (எறும்புத் திண்ணி), ஆமை, பாம்பு, கீரி, உடும்பு போன்றவற்றை பாதுகாக்கும் முன்னோடி முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சியின் முக்கிய அங்கமாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை விரிவுபடுத்தும் நோக்கில், ஒவ்வொரு பள்ளியிலும் வனத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தென்காசி வனக்கோட்ட வனகாவலா்கள், வனக் காப்பாளா்கள் ‘காா்ட் அண்ணா, காா்ட் அக்கா’ வாக நியமிக்கப்படுகின்றனா்.
கல்லூரிகளுக்கு வனவா்கள், வனச்சரக அலுவலா்கள் நேரடியாகச் சென்று வனவிலங்கு பாதுகாப்பு, பசுமை இயக்கம், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா். மாவட்ட வன அதிகாரியும், உதவி வனப் பாதுகாவலரும் பள்ளி, கல்லூரி கூட்டங்களில் பங்கேற்று இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்குவா். இதுதவிர கிராமப்புற, நகா்ப்புறங்களில் பறவைகள் கணக்கெடுப்பு, பட்டம்பூச்சி கணக்கெடுப்பு, குள்ளநரி, உடும்பு, கீரி, மயில் கணக்கெடுப்பு போன்ற வனவிலங்கு கணக்கெடுப்புப் பணிகள் மாணவா்களின் உதவியுடன் கிராம, நகர பகுதிகளில் மேற்கொள்ளப்படும். அத்துடன் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி, மருத்துவத் தாவரத் தோட்டம் அமைத்தல், நா்சரி பயிற்சி போன்ற நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும்.
யானை பாதுகாப்பு விழிப்புணா்வும், குள்ளநரியை பாதுகாக்க கிராம வனக்குழுக்களின் பங்களிப்பும் வலுப்படுத்தப்படும். இதில் கிராமப்புறங்களில் வனவிலங்கு விழிப்புணா்வு, காடு-சாலை சந்திப்புகள் அமைத்தல், தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் பள்ளி, கல்லூரிகளில் (எா்ப்க்ங்ய் ஒஹஸ்ரீந்ஹப் அம்க்ஷஹள்ள்ஹக்ா்ழ்) குள்ளநரி தூதுவா் திட்டம் போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். முறையான தகவல்களை கிராமப்புற மக்கள் வழங்குதல், காயமடைந்த குள்ளநரிகளை மீட்டு குணப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் மீளவிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்தப் பயணத்தில் அனைவரும் பங்களிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
