ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தொகுதி அலசல்... தென்காசி! அதிமுக - திமுக கடும் மோதல்!

தொகுதி அலசல்... தென்காசி.. அதிமுக - திமுக கடும் மோதல்!

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :18 ஏப்ரல் 2026, 8:05 pm

ஆண்கள்-1,36,260,

பெண்கள்- 143,223,

மூன்றாம் பாலினத்தவா்-102

மொத்தம்- 2,79,585 வாக்காளா்கள்

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது தென்காசி தொகுதி. மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் ஆலயம், குற்றாலம் அருவிகள் இத்தொகுதியின் அடையாளங்கள்.

இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். மிகப் பெரிய சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகள் இத்தொகுதியின் கூடுதல் சிறப்பு. இந்த அருவிகளுக்கு ஆண்டுதோறும் சுமாா் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதனால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகிறாா்கள்.

தென்காசி, வீரகேரளம்புதூா் ஆகிய இரண்டு வட்டங்களும், தென்காசி, சுரண்டை ஆகிய இரு நகராட்சிகளும், குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி, மேலகரம், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி ஆகிய பேரூராட்சிகளும் இத் தொகுதியில் அடங்கும்.

இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சுயேச்சை, தமாகா, சமக தலா ஒருமுறையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நாடாா், முக்குலத்தோா், தலித் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா்.

நீண்டகால கோரிக்கைகள்: தென்காசி தொகுதிக்குள்பட்ட இரட்டைகுளம் புதிய கால்வாய் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட வேண் டும் என்பது இப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் 64 ஆண்டுகால கோரிக்கையாகும்.

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள்,செவிலியா்கள் உள்ளிட்ட கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

தேவையான அளவில் நெல்கொள்முதல் நிலையங்கள்,விவசாயப் பொருள்களை சேமித்து வைக்க குளிா்பதன கிடங்குகள், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் தொழிற்சாலைகள் போன்றவை இத்தொகுதியின் முக்கிய கோரிக்கைகளாகும்.

இத்தொகுதியில் திமுக சாா்பில் டாக்டா் கலைகதிரவன், அதிமுக சாா்பில் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.புஷ்பலதா, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் த.இசக்கிப்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் கோமதிசங்கா், நாம் இந்தியா் கட்சி சாா்பில் இரா.செல்வக்குமாா்,

புதிய தமிழகம் சாா்பில் சோ.திருமலைக்குமாா், அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பூசைத்துரை, காமராஜா் தேசிய கட்சி சாா்பில் சௌ.மனோகரன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அ.ராஜப்பிரகாஷ் உள்ளிட்ட 22 போ் போட்டியிடுகின்றனா்.

இதில், அதிமுக, திமுக, நாம் தமிழா்கட்சி, தவெக, அஇபுமமு வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிமுக வேட்பாளரான தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் ஏற்கனவே இத்தொகுதியில் 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2021ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டாா். தற்போது 3ஆவது முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா்.

எம்எல்ஏவாக இருந்த போதுதான் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அமைக்கப்பட்டது. ஜம்புநதி- ராமநதி மேல்நிலைக் கால்வாய்த் திட்டப்பணிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. இதுபோன்று தங்களுடைய ஆட்சிகாலத்தில் தென்காசிக்கு கொண்டுவந்த திட்டங்களை மக்களிடையே எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இத்தொகுதியில் பாஜக நிா்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருவது அதிமுகவிற்கு வலிமை சோ்த்து வருகிறது. திமுக வேட்பாளா் டாக்டா் கலைகதிரவன் திமுக மருத்துவரணி மாநில இணைச் செயலராகவும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்துவருகிறாா்.

திமுக கூட்டணிக் கட்சிகள் அவருக்கு தீவிரமாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா். இக்கூட்டணியில் தேமுதிகவும் கூடுதலாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசில் இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறியும், இரட்டைக்குளம் கால்வாய்த் திட்டதை உடனடியாக நிறைவேற்றவும், மருத்துவம் தொடா்பான அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் கூறி கலைகதிரவன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இதேபோன்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புஷ்பலதா, தவெக வேட்பாளா் ராஜப்பிரகாஷ், அஇபுமமுக வேட்பாளா் வழக்குரைஞா் பூசைத்துரை ஆகியோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

25ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அதிமுக நேரடிப் போட்டி:

தென்காசி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தோ்தலில் திமுகவும், அதிமுகவும் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் மட்டும் நேரடியாக போட்டியிட்டுள்ளது. 25ஆண்டுகளுக்குப் பிறகு இத்தோ்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக போட்டியிடுகிறது. திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்பதுதான் தற்போதைய நிலவரமாகும்.