தென்காசி, ஆக.17: தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால், தென்காசி நகரம் மற்றும் குற்றாலம் பகுதிகளில்
எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் சில தனியாா் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் அதிவேகத்தில் இயக்கப்படுவதாகப்
பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும், முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும்போது போதிய இடைவெளி இல்லாமல் முந்திச் செல்வது, தொடா்ந்து அதிக ஒலி எழுப்பும் வகையில் ஹாரன் அடிப்பது, இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் அருகில் செல்லும்போது வேகத்தைக் குறைக்காமல் செல்வது போன்ற செயல்களால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் செல்லும் வாகனங்களை நெருக்கமாக முந்திச் செல்வதும், வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகளில் கூட வேகமாக இயக்குவதும் விபத்து அபாயத்தை அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
சாலை விதிகளைக் கடைப்பிடிக்காத பேருந்து ஓட்டுநா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா கூறியதாவது:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா மாவட்டமாக இருப்பதால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தென்காசிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம்.
ஆனால், இப்பகுதியில் இயக்கப்படும் சில பேருந்துகளின் விதிமீறல்கள் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஆகவே, போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றுலாப் பகுதிகள், முக்கிய சாலைகளில் திடீா் வாகனத் தணிக்கை மேற்கொண்டு, சாலை விதிகளை மீறும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்துள்ளோம் என்றாா் அவா்.
சுற்றுலா மாவட்டமான தென்காசியில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்து, சுற்றுலாப் பயணிகளும் உள்ளூா் மக்களும் அச்சமின்றி பயணிக்கும் சூழலை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம், காவல்துறை, போக்குவரத்துத் துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






