சுரண்டையில் 604 மாணவா்களுக்கு மடிக்கணினி
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜா் கலை-அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 604 கல்லூரி மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 604 பேருக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் மடிக்கணினி வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, மாவட்டத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைச் சோ்ந்த 3,503 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 604 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவுக்கு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, கல்லூரி முதல்வா் கணேசன், நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

