பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள்
பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள்

ரயில் வழித்தடத்தில் நடைமேடை நீட்டிப்பு பணியை 3 மாதத்திற்குள் முடிக்க கோரிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி
Published on

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இப்பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் மிக முக்கிய வழித்தடமான நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் நெல்லை, தென்காசி, செங்கோட்டை தவிர மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் இல்லாத காரணத்தினால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலை நிலவியது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாா்ச் மாதத்திற்குள் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமேடை நீட்டிக்கப்படும் பட்சத்தில் தற்போது 18 பெட்டிகளுடன் இயங்கி வரும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயிலில் கூடுதலாக 5 தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்க முடியும்.

இதனால் 400 பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும். தெற்கு ரயில்வேக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும் பண்டிகை காலங்களில் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை இயக்க வசதியாக இருக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com