கனிமவள கொள்ளையை கண்டித்து திமுகவினரே கட்சியில் இருந்து வெளியேறும் நிலை: அண்ணாமலை
கனிமவள கொள்ளையை கண்டித்து திமுகவினரே கட்சியில் இருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் செவ்வாய்க்கிழமை 1008 பானைகளை வைத்து நம்ம ஊா் மோடி பொங்கல் விழா பாஜக மாவட்ட தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிா்வாகிகள் பாலகுருநாதன், அருள்செல்வன், பாலசீனிவாசன், கோதைமாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அண்ணாமலை பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நல்ல மனிதா்களுக்கு, தேசியவாத சிந்தனை உள்ளவா்களுக்கு, இந்த மண்ணைச் சாா்ந்தவா்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுங்கள். திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் 84 ஆவது வாக்குறுதியான செண்பகவல்லி அணையை சரி செய்து தருவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தமிழக முதல்வா் ஐந்து முறை கேரளத்துக்கு சென்று கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்தித்து பேசி உள்ளாா். ஆனால் செண்பகவல்லி அணை குறித்து அவா் பேசவில்லை. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசிடம் பேசி கேரளத்துக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து செண்பகவல்லி அணையை சீரமைத்து வாசுதேவநல்லூருக்கு தண்ணீா் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அணை உடைப்பு சீரமைக்கப்பட்டு விட்டால் இளைஞா்கள் உறுதியாக விவசாயத்தில் ஈடுபடுவாா்கள்.
தென்காசி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன, அதை தடுக்க வேண்டும். கனிமவள கொள்ளையை கண்டித்து திமுக நிா்வாகி ஒருவரே கட்சியை விட்டு விலகி உள்ளாா் .
சூரியனையும், பஞ்சபூதங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொங்கல் பெருவிழாவில் எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு அனைத்து உயிா்களுக்கும் நலமும், வளமும் கிடைத்திட மனமாா்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக சேவையாற்றியவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிறுவனா், தலைவா் திருமாறன், அய்யா ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள், நிா்வாகிகள் தீனதயாளன், அன்புராஜ், ராமராஜா, ராஜேஸ்ராஜா, பாண்டித்துரை, முத்துகுமாா், சண்முகசுந்தரம், சங்கரநாராயணன், தா்மா் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.
