கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் டயாலிசிஸ் பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க எம்எல்ஏ கோரிக்கை

தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் டயாலிசிஸ் பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜிடம், தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
அந்த மனு விவரம்: அச்சன்புதூா் பேரூராட்சியில் 15, 000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் பகல் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இரவு நேரத்தில் அவசர முதலுதவிக்கு தென்காசி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால், அச்சன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்திடவும், இரவு நேர மருத்துவரை நியமனம் செய்யவும் வேண்டும்.
சுமாா் ஒன்றே முக்கால் ஏக்கா் பரப்பில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் டயாலிசிஸ் பிரிவுகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், இம்மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளும் சிறப்பாக இயங்கிட மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை பிஎம்ஜெவிகே திட்டத்தின் கீழ், தரைத்தளத்துடன் கூடிய 5 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டடங்கள் கட்ட தென்காசி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடையநல்லூா் இக்பால் நகா் பகுதியில் இயங்கிவரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வு மையமாக தரம் உயா்த்தி வாரத்திற்கு ஒரு முறை என்ற நிலையை மாற்றி தினசரி மருத்துவா், செவிலியா்களுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக செயல்படுத்திட வேண்டும்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பிணவறை கட்டடம் அமைத்துத் தர வேண்டும். மேக்கரை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

