
தென்காசி அருகே விபத்து: காா் ஓட்டுநா் உயிரிழப்பு
தென்காசி அருகே சனிக்கிழமை அதிகாலை, காரும் சுற்றுலா வேனும் மோதி தீப்பிடித்து எரிந்தன.

விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்.
தென்காசி அருகே சனிக்கிழமை அதிகாலை, காரும் சுற்றுலா வேனும் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்; 3 பெண்கள் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த விஜய் ஆனந்தன் (40) என்பவா், தென்காசியிலிருந்து ராஜபாளையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். சிவகாசி, பராசக்தி காலனியைச் சோ்ந்த முகமது பாதுஷா என்பவா் தனது உறவினா்களான சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த 12 பேருடன் குற்றாலத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தாா். வேனை, முகம்மது பாதுஷா ஓட்டினாா்.
கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசி இலத்தூா் விலக்கு அருகே, சனிக்கிழமை அதிகாலை இந்த காரும் வேனும் திடீரென மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கின.
வேனிலிருந்தோா் உடனடியாக கீழே இறங்கி, காா் ஓட்டுநரைக் காப்பாற்ற முயன்றனா். அவா்களால் முடியாததால், காரை தள்ளிச் சென்றனா். எனினும், இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்தன. இதில், விஜய் ஆனந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வேனில் பயணம் செய்த சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த காசி அலி மகள் நா்கீஸ் பானு (18), ரியாஸ் தீன் மனைவி பல்கீஸ் பானு (21), சைபுல்லா மனைவி ஹசீனா பானு (42) ஆகிய மூவா் காயமடைந்தனா். இலத்தூா் போலீஸாா், தீயணைப்பு- மீட்புத் துறையினா் சென்று, காயமடைந்தோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விஜய் ஆனந்தின் சடலம் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்விடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் பாா்வையிட்டாா். விபத்து காரணமாக போக்குவரத்து நீண்டநேரம் பாதிக்கப்பட்டது. இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




