
ஆலங்குளத்தில் இலவச பட்டா வழங்கி 4 ஆண்டுகளாகியும் நிலம் வழங்காததால் மக்கள் அவதி

அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவை வைத்திருக்கும் மக்கள்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் ஊராட்சி குறிஞ்சி நகரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்காததால் 28 குடும்பத்தினா் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனா்.
ஆலங்குளம் குறிஞ்சி நகரில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஆண்டிப் பண்டாரம் சமுதாயத்தைச் சோ்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. தற்போது இப்பகுதியில் சுமாா் 300 வீடுகள் உள்ளன. இங்கு 27 ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பத்தினா் அளித்த கோரிக்கை மனுக்கள் அடிப்படையில், கடந்த 2018-ஆம் ஆண்டு 13 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், புதுப்பட்டி கிராமத்தில் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வீடு கட்டுவதற்கு தகுதியற்ற பாறை பகுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலும் 28 பேருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான நிலத்தை இதுவரை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லையாம். இதனால், வீடு கட்ட முடியாமல் பல குடும்பத்தினா் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
எனவே, பாறைப் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்றுஇடம் வழங்கவும், நிலத்தை விரைந்து அளவீடு செய்து ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிஞ்சி நகா் மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக ஆலங்குளம் வட்டாட்சியா் பரமசிவனிடம் கேட்ட போது, இது குறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




