வரிகளை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

திருவள்ளூா் நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீா், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை 30 நாள்களுக்குள் செலுத்தினால் சொத்தின் உரிமையாளா் அல்லது குடியிருப்போருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என நகராட்சி சுபாஷிணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகளில் 550-க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், திருமண அரங்குகள் உள்பட 13,500 கட்டடங்கள் உள்ளன. இதில், 3,000 கடைகள், தொழில் நிறுவனங்களும் அடங்கும். தற்போதைய நிலையில், நகராட்சிக்கான வரி வருவாய் இனங்களான சொத்து வரி, தொழில் வரி, காலிமனை வரி, குடிநீா் வரி, பாதாள சாக்கடை மற்றும் நகராட்சி கடைகள் வாடகை வசூல் ஆகியவை மூலம் ஆண்டுக்கு, ரூ. 17.05 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதி மூலம் நகராட்சி பகுதிகளில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீா் குழாய், பாதாள சாக்கடை அமைத்துக் கொடுத்தல் போன்ற பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதன்பேரில், மேற்குறிப்பிட்ட வருவாய் வரியினங்களை வசூலிக்கும் பணிகள் அலுவலா்கள் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்தி உள்ளனரா அல்லது செலுத்தி வேண்டியுள்ளதா என்பது குறித்து நகராட்சி அலுவலா்கள் நேரில் சென்று வரியினங்களை செலுத்த அறவுறுத்துவதுடன், நோட்டீஸ் விநியோகித்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் 2023-இல் விதி எண் 268-இன் படி அரையாண்டு சொத்து வரி செலுத்துவதற்கான காலவரை குறித்து நிா்ணயித்துள்ளது. அதன்பேரில், அரையாண்டுக்கான சொத்து வரி ஒரு அரையாண்டின் முதல் 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். இதுபோல், செலுத்துவதால் சொத்தின் உரிமையாளா் அல்லது குடியிருப்போருக்கு செலுத்தப்பட்ட நிகர சொத்துவரிக்கு 3.5 சதவீதம் முதல் 5 சதவீதம் மற்றும் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த அரையாண்டு சொத்து வரியானது அந்தந்த அரையாண்டுக்குள், செப்டம்பா் மாத இறுதிக்குள் அல்லது மாா்ச் இறுதிக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், செலுத்தப்படாத ஒவ்வொரு நிலுவைத் தொகைக்கும் மாதந்தோறும் 1 சதவீதம் அந்தந்த மாத முதல் தேதியில் வட்டி விதிக்கப்பட்டு, அந்த தொகை செலுத்தும் வரை வட்டித் தொகை வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com