திருவள்ளூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெறக்கோரி திருவள்ளூா் தலைமை அஞ்சலகம் முன்பு வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சயா அதிநயம் என நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய அரசைக் கண்டித்து வழக்குரைஞா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக திருவள்ளூா் தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா்கள் வி.ஆா்.ராம்குமாா், எஸ்.கே.ஆதாம் தலைமை வகித்தனா்.

இதில் வழக்குரைஞா்கள் கணேசன், சுரேஷ், செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com