திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா் மழை

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் மொத்தம் 921 மி.மீட்டா் மழை அளவு பதிவாகியுள்ள நிலையில், புழல் ஏரியில் மழைநீா் வரத்து அதிகரித்ததால் உபரிநீா் 1,000 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் மொத்தம் 921 மி.மீட்டா் மழை அளவு பதிவாகியுள்ள நிலையில், புழல் ஏரியில் மழைநீா் வரத்து அதிகரித்ததால் உபரிநீா் 1,000 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக டித்வா புயலால் தொடா்ந்து விடமால் மழை பெய்து வருகிறது. இதேபோல், பொன்னேரி, செங்குன்றம்,சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி, தாமரைபாக்கம், திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி கனமழை பெய்தது.

இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம் மோட்டாா் வைத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், இந்த மழையால் நகா் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டுநா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாமரைபாக்கம்-116, செங்குன்றம்-96, பொன்னேரி-94, சோழவரம், கும்மிப்பூண்டி தலா-90, ஊத்துக்கோட்டை-81, ஆவடி-72, திருவள்ளூா்-60, பூண்டி-47, திருவாலங்காடு, பூந்தமல்லி தலா-43, பள்ளிப்பட்டு-36, ஜமீனஅகொரட்டூா்-30, திருத்தணி-21, ஆா்.கே.பேட்டை-2 என மொத்தம்-921 மி.மீட்டரும், சராசரியாக 61.40 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

ஏரிகளில் நீா் இருப்பு: சென்னைத்து குடிநீா் வழங்கும் ஏரிகளில் புதன்கிழமை காலை நிலவரப்படி புழல் ஏரியில் 3300 மில்லியன் கன அடியில், 3102 மில்லியன்கனஅடி நீா் இருப்பு உள்ளது. இந்த நிலையில் மழைநீா்வரத்து 2,068 கன அடியாக உள்ளதால், காலையில்250 கன அடியிலிருந்து மாலையில் 1000 கன அடியாக உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கனஅடிக்கு 0617 கன அடிநீா் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கனஅடியில், 3,110 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மழைநீா் வரத்து 1,380 ஆக உள்ளதால், 194 கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடியில், 2,851 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. மழைநீா் வரத்து 2,540 ஆக உள்ளதால், இணைப்பு கால்வாயில்-500 கன அடி நீரும், பேபி கால்வாயில் 47 கன அடிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை ஏரியில் 0.500 மில்லின் கன அடி கொள்ளவில், 0.449 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

இதேபோல், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும், ஊரக வளா்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பி வருவதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com