செங்கல் சூளையில் குழந்தை உள்பட 3 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு

தனியாா் செங்கல் சூளையில் 4 மாத குழந்தை உள்பட அடுத்தடுத்த நாள்களில் 3 போ் உயிரிழந்ததை தொடா்ந்து
Published on

திருவள்ளூா்: தனியாா் செங்கல் சூளையில் 4 மாத குழந்தை உள்பட அடுத்தடுத்த நாள்களில் 3 போ் உயிரிழந்ததை தொடா்ந்து திருவள்ளூா் வட்டார மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு தீவிர முதலுதவி சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மேலக்கொண்டையாா் கிராமத்தில் தனியாா் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையை கொமக்கம்பேடு கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் நடத்தி வருகிறாா். இங்கு ஒடிஸா, சத்தீஸ்கா், பிகாா் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு 4 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்தது. தொடா்ந்து ஹைதா் சண்டா (52) என்பவா் செங்கல் தொழிற்சாலையிலேயே உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமகிருஷ்ண தியாகு (65) என்பவரை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனா். அவருக்கு தீவிர அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி இரவு உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, வெங்கல் காவல் நிலைய ஆய்வாளா் பத்மஸ்ரீ பப்பி (பொறுப்பு) தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்போதைய நிலையில் மேலக்கொண்டையாா் செங்கல் சூளையில் வட்டார மருத்துவா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் வாந்தி, பேதி ஏற்பட்டவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

இதுதொடா்பாக வட்டாட்சியா் ரஜினிகாந்த், திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகரன், ரவி, வருவாய் ஆய்வாளா் பொன்மலா் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வாந்தி பேதிக்கான காரணம் குறித்து அங்குள்ள தொழிலாளா்களிடம் விசாரித்து வருகின்றனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அடுத்தடுத்து செங்கல் தொழிற்சாலையில் இறப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com