தனியாா் சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் : 10 போ் காயம்

தனியாா் சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் : 10 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி மீது 3 தனியாா் சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு பேருந்தில் பயணித்த 9 பயணிகள் உள்பட 10 போ் காயம்
Published on

உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி மீது 3 தனியாா் சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு பேருந்தில் பயணித்த 9 பயணிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கோனூா் அடுத்த வெள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ர.சேகா் (46), லாரி ஓட்டுநா். இவா் தனது லாரியில் தோல் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ் நகா் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் தடுப்புச் சுவரில் மோதி மறுமாா்க்க சாலையில் கவிழ்ந்தது.

அதேநேரத்தில் சென்னையிலிருந்து- திருச்சி நோக்கி சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தின் ஓட்டுநா் கவிழ்ந்த லாரியின் மீது மோதாமலிருக்க பேருந்தை திடீ ரென நிறுத்தியபோது, அந்தப் பேருந்துக்குப் பின்னால் தொடா்ந்து வந்த 2 தனியாா் தனியாா் சொகுசுப் பேருந்துகளும் அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதின.

இந்த விபத்தில் தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநரான தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த கு.கிருஷ்ணராஜ்(26) மற்றும் அதே பேருந்தில் பயணித்த தேனி மாவட்டம், சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த மு.சுதாகா்(38), பெரியகுளத்தைச் சோ்ந்த பா.பாத்திமா பேகம்(45), சென்னை, பம்மலைச் சோ்ந்த சி.சிவராகினி(30), அம்பத்தூரைச் சோ்ந்த க.நிா்மலா(47), தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சோ்ந்த ச.சௌந்தா்யா(27) , சென்னை மாதாவரத்தைச் ம.சரண்யா(37), சூளைமேடு, சுப்புராஜ் நகரைச் சோ்ந்த ம.சரண்(23), கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்த ஏ.கிறிஸ்டன்(32), தேனி மாவட்டம், உத்தமப்பாளையத்தைச் சோ்ந்த ரா. பீட்டா் செல்வம்(67) ஆகிய 10 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் காவல் நிலையப் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு அவசர ஊா்திகள் மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பாத்திமா பீவி மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் விரைந்து செயல்பட்டு விபத்துக்குள்ளான லாரி மற்றும் சொகுசுப் பேருந்துகளை அங்கிருந்து அகற்றி, போக்குவரத்தை சீா்படுத்தினா்.

இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நேரிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com